“என் திருமண விஷயத்தில் நான் கொடுத்து வைத்தவன்! – சிவகுமார் #AppExclusive

சிவகுமாரின் திருமண வாழ்க்கை எப்படியிருக்கிறது?

“வெகு பிரமாதமாக இருக்கிறது. ஒரு குறையும் இல்லை. நான் கற்பனை செய்ததைவிட எல்லாமே நல்லபடியாக நடந்து கொண்டு வருகிறது!” என்றார் சிவகுமார்:

“எல்லா இளைஞர்களும் கற்பனை செய்வதைப் போல நானும் திருமணத்திற்கு முன்பு, எனக்கு வரப்போகும் மனைவி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பேன். என் கற்பனைக்கு உருவம் கொடுத்த லட்சுமி, நான் யோசித்ததற்கும் மேலாகவே இருக்கிறாள்.

MGT at Actor Sivakumar’s Marriage –

“என் குடும்பத்தினருடன் மிகவும் சரளமாகப் பழகுகிறாள். நான் படப்பிடிப்பிற்குப் போய்விட்டால், வீட்டில் அவளுக்கு நிறைய வேலை இருக்கும். சமையல் வேலை முதற்கொண்டு எல்லா வேலைகளும் என் மனைவிதான் செய்கிறாள். என் வேலை விஷயத்தில், குறிப்பாக படப்பிடிப்பு, மற்றும் ‘கால் ஷீட்’ போன்ற விஷயங்களில் தலையிடுவதில்லை. ஆரம்பத்தில் தெரிந்து கொள்வது நல்லதுதானே என்று கற்றுக் கொடுக்கும்போது கூட, வேண்டாம் என்று கூறிவிட்டாள்! 

“படித்தவள், பட்டம் பெற்றவளாயிற்றே என்று பயந்தேன். படித்தவளாக இருந்தும், அமைதியாக எல்லாவற்றையும் செய்கிறாள். ஒரு நடிகனை மணந்து கொண்டதால் தலைகர்வம் சிலருக்கு ஏற்பட்டுவிடலாம். என் திருமண விஷயத்தில் நான் கொடுத்து வைத்தவன்!” – மனைவியின் பெருமையில் திளைக்கிறார், சிவகுமார்.

சிவகுமாரும், அவருடைய மனைவியும் பார்த்த முதல் படம் ‘சட்டக்காரி’. அந்தப் படத்தில் லட்சுமியின் நடிப்பைச் சிவகுமாரின் மனைவி மிகவும் புகழ்ந்தாராம்.

சிவகுமார் நடித்த ‘எங்கம்மா சபதம்’ படத்தைப் பார்த்த அவருடைய தீர்ப்பு: “சிரித்துச் சிரித்து வயிறு வலித்து விட்டது. இவ்வளவு நகைச்சுவையாக நடிப்பீர்கள் என்று நான் கனவிலும் கருதவில்லை!” -இதைக் கூற, சிவகுமார் மிகவும் சங்கடப்பட்டார்:

“என் மனைவி  வெட்கப்படும் சுபாவம் உடையவள். யாருடனும் உறவினர்களைத் தவிர அதிகமாகப் பேசமாட்டாள். நானும் லட்சுமியும் வெளியேபோவது கூடக் குறைவுதான்!“

Actor Sivakumar’s Marriage Photo

திருமணமான புதிதில் சில சபாக்கள் ஒன்று சேர்ந்து பெரிய விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தன. ஆனால், என் மனைவி அதில் கலந்துகொள்ள மறுத்துவிட்டாள். காரணம், பெரிய கும்பலில் கலந்து கொள்வது, விழாக்களில் கலந்து கொள்வது ஆகியவை அவளுக்குப் பிடிக்காது. ஆனால், தனியொருவர் தன் குடும்பத்தினருடன் வீட்டில் விருந்து கொடுப்பதை அவள் என்றைக்கும் மறுக்கமாட்டாள்.

“திருமணத்திற்கு முன்பே என்னிடம் ஒரு விஷயத்தைத் தீர்மானமாகக் கூறினாள் என் மனைவி. ‘பத்திரிகை பேட்டி, புகைப்படம் ஆகியவை என் விஷயத்தில் கூடவே கூடாது. பத்திரிகைகளில் வரும் உங்களைப் பற்றிய புகழ்ச்சிகளைப் படித்து இன்புறுகிறேன். அது மட்டும் போதும். என்னை மற்ற பேட்டிகளுக்கோ, புகைப்படத்திற்கோ எப்போதும் வற்புறுத்தக்கூடாது!’ என்று கூறிவிட்டாள்.”

– சியாமளன்
(17.11.1974 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து…)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.