சென்னை, கொளத்தூர் மணவாளன் தெருவைச் சேர்ந்தவர் ஷியாம். இவர் அந்தப் பகுதியில் பால் விற்பனை செய்யும் கடை நடத்திவருகிறார். இவருக்குக் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. ஆடி மாதம் என்பதால், ஷியாமின் மனைவி அவர் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இந்த நிலையில், ஷியாம் வீட்டின் கீழ்த்தளத்தில் உள்ள அறையில் ஏசியை போட்டுவிட்டு தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். திடீரென இரவு பயங்கர சத்தம் கேட்டிருக்கிறது. அதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் உடனடியாகக் கீழே வந்து பார்த்தபோது, கீழ்த்தளத்தில் உள்ள அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. அந்த அறையின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் குறித்துத் தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அறையை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, ஏசி வெடித்து அந்த அறை முழுவதும் தீ பற்றி எறிந்துகொண்டிருந்தது. தீ விபத்தில் உடல் கருகி ஷியாம் இறந்துகிடந்தார். இந்த தீ விபத்து தொடர்பாக திரு.வி.க நகர்ப் பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
இறந்தவரின் உடல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. முதற்கட்ட விசாரணையில், உயர் மின் அழுத்தம் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏசி வெடித்து பால் வியாபாரி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.