கஞ்சா சாக்லேட் விற்பனை: கோவையில் 58வயது முதியவர் கைது…

கோவை: கோவை ரத்தினபுரி பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்ததாக 58 வயது முதியவர் கைது செய்யப்பட்டு உள்ளார். போதை சாக்லேட் விற்பனை கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கஞ்சா உள்பட போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்க கஞ்சா 2.0 என்ற திட்டத்தை டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்து, குற்றவாளிகளை வேட்டையாடி வருகிறார். இருந்தாலும் கஞ்சா விற்பனையும், பதுக்கலும் அதிகரித்து வருகிறது. காவல்துறையினரின் வேட்டையில் மூட்டை மூட்டையாக கஞ்சா போன்ற போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை, ரத்தினபுரி பகுதியில் கஞ்சா பயன்பாடு  அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்த நிலையில், அந்த பகுதி இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளுக்கு வலைவிரித்தனர். அதைத்தொடர்ந்து,  கோவை கண்ணப்ப நகர் சங்கனுார் ரோடு சந்திப்பில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவரிடம்  இருந்த பையை சோதனையிட்டபோது, சாக்லேட்டுகள் இருப்பது தெரியவந்தது. சாக்லேட்டுகளை பிரித்து சோதனை செய்ததில், அவை கஞ்சா துாளை உருண்டையாக்கி தயார் செய்யப்பட்டவை என்பது தெரிந்தது.

இதையடுத்து அந்த நபரை கைது செய்த காவல்துறையினர், அந்த நபரிடம் இருந்த, 20 கிலோ கஞ்சா சாக்லேட் பொட்டலங்களையும், இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட முதியவர், அண்ணா மார்க்கெட்டில் கூலி வேலை செய்தவர், இப்போது கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து  கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர்களின் பட்டியலையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். விசாரணையில், அவர் நகரத்தில் 15 பேர், முதன்மையாக இளைஞர்கள், நெட்வொர்க் வைத்திருப்பது தெரியவந்தது. அவர் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரில் இருந்து சரக்குகளை கொண்டு வந்து கும்பலுக்கு விநியோகித்தார், பின்னர் அதை சில்லறை விற்பனையில் விற்று வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை வடக்கு மாவட்ட துணை ஆணையர்ஜி.எஸ்.மாதவன் கூறுகையில், “சயான் (புளு) நிறத்தில் உள்ள சாக்லேட்டில் சாதாரண சாக்லேட்களைப் போலவே பிளாஸ்டிக் உறைகள் இருந்தன. இது சுமார் 5 கிராம் சாக்லேட் 200க்கு விற்கப்படுகிறது. பெரும்பாலும் இந்த நெட்வொர்க்குகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைக்கின்றன. இதுதொடர்பாக 16 பேர் மீதும் IPC மற்றும் போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் (NDPS) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.

இந்த வார தொடக்கத்தில், ஆர்.எஸ்.புரம் போலீசார் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவரிடமிருந்து 40 கிலோ கஞ்சா கலந்த சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர். சமீபத்தில் திருப்பூரில் விருந்தினர் தொழிலாளிகளிடம் இருந்து இதுபோன்ற பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.