கரூர்: கரூர் மாவட்டத்தில் அனைத்துத் துறை அலுவலகங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு குடிநீர், கழிவறை வசதியுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. அதனை புகைப்படம் எடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து அனைத்துத் துறையினர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக. 1) புகைப்படங்களை சமர்ப்பித்து வருகின்றனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அனைத்துத் துறை அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைப்படி தலைமைச் செயலாளர் அறிவுறுத்தலின்பேரில் அனைத்துத் துறை அலுவலகங்களிலும் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் குடிநீர், கழிவறை வசதியுடன் கூடிய ஓய்வறை அமைத்து அந்த புகைப்படத்தை அனுப்புமாறு அறிவுறுத்தியிருந்தார்.
ஆனால், இரு வாரங்களுக்கு மேலாகியும் யாரும் இப்பணிகளை மேற்கொள்ளாததால் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக. 1) நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்க வரும்போது புகைப்படத்தை நேரில் கொண்டு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்த அனைத்துத் துறை அலுவலகங்களிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு குடிநீர், கழிவறையுடன் கூடிய ஓய்வறை தயார் செய்து அதனை புகைப்படம் எடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக. 1) ஒப்படைத்து வருகின்றனர்.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு குடிநீர், கழிவறையுடன் அமைக்கப்பட்டுள்ள ஓய்வறையை ஆட்சியர் த.பிரபுசங்கர் இன்று (ஆக. 1) திறந்து வைத்தார்.