வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கரோனாவிலிருந்து மீண்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கும் மீண்டும் கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்னரே இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டார். இந்த நிலையில் ஜோ பைடனுக்கு கடந்த ஜூலை 21 ஆம் தேதியன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜோ பைடன் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தது நலமாக உள்ளார் என வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இந்நிலையில் பைடனுக்கு மீண்டும் சனிக்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பைடன் தன்னை தானே மீண்டும் தனிமைப்படுத்திக் கொண்டார். கரோனா தொற்று காரணமாக தனது பயணங்களை ஜோ பைடன் தள்ளி வைத்துள்ளார். தொடர்ந்து அதிபர் கண்காணிப்பில் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜோ பைடனை கண்காணிக்கு மருத்துவர் ஆல்பர்ட் கூறும்போது, “ அதிபர் நலமாக இருக்கிறார். அவருக்கு கரோனாவிற்கான தீவிர அறிகுறிகள் இல்லை. அவர் தன்னை தனிப்படுத்திக் கொண்டு அலுவலக பணிகளை செய்து வருகிறார்” என்றார்.