சென்னை: குடியரசுத் தலைவர் கொடியை பெறும் நிகழ்வை முன்னிட்டு, டிஜிபி முதல் காவலர் வரை அனைவருக்கும் தமிழக அரசு காவல் பதக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று நலத் திட்டங்களை நிறைவேற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் கொடி பெறும் விழா, சென்னை ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்று, குடியரசுத் தலைவர் கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாயிலாக தமிழக காவல்துறைக்கு வழங்கினார்.
விழாவில் பங்கேற்பதற்காக காலை 9.30 மணிக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, வாகன அணிவகுப்புடன் வந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உள்துறை செயலர் க.பணீந்திர ரெட்டி, டிஜிபிசைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் வரவேற்றனர். பரங்கிமலை துணை ஆணையரும் அணிவகுப்பு தலைவருமான பிரதீப் தலைமையில் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை குடியரசு துணைத் தலைவர் ஏற்றுக்கொண்டார். பின்னர், திறந்த ஜீப்பில் சென்று மாநில பேரிடர் மீட்புப்படை, அதிரடிப்படை உள்ளிட்ட பிரிவினர் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பைப் பேண்டு இசைக்குழுவினரின் அணிவகுப்பை பார்வை யிட்டார்.
அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் கொடியை அணிவகுப்பு துணைத் தலைவரான டிஎஸ்பி பிரீத்தியிடம் இருந்து பெற்ற குடியரசு துணைத் தலைவர், அதை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். அந்தக் கொடியை டிஜிபியிடம் முதல்வர் வழங்க, அவர் அதை அணிவகுப்பு அலுவலரிடம் வழங்கினார். அதன்பின், அந்தக் கொடியுடன் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை குடியரசு துணைத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
தமிழக காவல்துறைக்கான புதிய சின்னத்தையும் குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டார். முதல்வர் அதை பெற்று டிஜிபியிடம் வழங்கினார். கொடி வழங்குதல் விழாவை முன்னிட்டு அஞ்சல் துறை சார்பில் சிறப்பு அஞ்சல் உறையையும் குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டார். அப்போது அஞ்சல் துறை தலைவர் செல்வகுமார் உடனிருந்தார்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி என்ற மிகமிக உயர்ந்த அங்கீகாரத்தை தமிழக காவல்துறை பெற்றுள்ளது. இது, காவல்துறைக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கே கிடைத்துள்ள பெருமை. இதே விருதை கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி தமிழக காவல்துறைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெற்றுத் தந்தார்.
கடந்த 1856-ல் அன்றைய மதராஸ் மாநகரில்தான் முதன்முதலில் காவல்துறை வரலாறு தொடங்கியது. 1859-ல் மதராஸ் மாகாண காவல்துறை சட்டம் இயற்றப்பட்டது. எனவே, நம் காவல்துறை, நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு முன்மாதிரியானது.
நாட்டிலேயே முதன்முதலாக மகளிர்காவலர்களை நியமித்தவர் கருணாநிதி. கடந்த 1973-ம் ஆண்டு உதவி ஆய்வாளர் உஷா தலைமையில் ஒரு தலைமைக் காவலர் மற்றும் 20 காவலர்கள் சென்னை மாநகரில் பணியமர்த்தப்பட்டனர். இன்று காவல்துறையில் ஒரு டிஜிபி, 2 கூடுதல்டிஜிபிக்கள், 14 ஐஜிக்கள் உள்ளிட்ட பெண்உயர் அதிகாரிகளும், 20 ஆயிரம் பெண்காவலர்களும் களப்பணியாற்றி வருகின்றனர். பெண்களுக்கு காவல்துறையில் அதிகாரம் அளித்ததில் முன்னோடி மாநிலம் தமிழகம். அதை அளித்தவர் கருணாநிதி.
கடந்த ஓராண்டாக காவல்துறையின் செயல்பாடு முன்பைவிட அதிக அளவில்பாராட்டும்படி உள்ளது. மதக் கலவரங்களோ, ஜாதி மோதல்களோ, மக்களை பீதிக்குள்ளாக்கும் குற்ற நிகழ்வுகளோ இல்லை. தொழிற்சாலை பகுதிகளில் அமைதி நிலவுகிறது. துப்பாக்கிச் சூடு, கள்ளச்சாராய உயிரிழப்புகள் இல்லை. காவல் நிலைய மரணங்கள் குறைந்துள்ளன. குறைந்துள்ளதே தவிர முற்றிலும் இல்லை என சொல்லவில்லை. காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தித் தாருங்கள்.
குற்றங்களை குறைக்கும் துறையாக இல்லாமல், குற்றங்கள் நடைபெறாத சூழலைஉருவாக்கும் துறையாக தமிழக காவல்துறை இருக்க வேண்டும். சிறு குற்றங்கள் நடந்தாலும் குற்றம் சாட்டப்பட்டவர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடக் கூடாது. பாலியல் குற்றங்களில் சிக்குபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
அமைதியான மாநிலமாக இருப்பதால்தான் ஏராளமான புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தை நோக்கி வருகின்றன. காவலர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் அமைக்கப்பட்ட காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, பல நலத்திட்டங்களை நிறைவேற்றித் தருவோம். காவல் அதிகாரிகள், காவலர்கள் கவலையின்றி பணியாற்றுவதற்கான சூழலை அமைத்துத்தர அரசு தயாராக உள்ளது.
குடியரசுத் தலைவர் விருது பெற்றுள்ள தமிழக காவல்துறையினர், தங்கள் சட்டையில் அதன் அடையாளமான கொடியை அணிந்து செல்வர். இந்த சின்னம் உங்களுக்கு பெருமை சேர்க்கும். தமிழக காவல்துறை தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி பெறும் நிகழ்வை முன்னிட்டு டிஜிபி முதல் காவலர் வரை அனைவருக்கும் தமிழக அரசு காவல் பதக்கம் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
நாட்டிலேயே குடியரசுத் தலைவரின் கொடியை பெறும் 5-வது மாநிலம் தமிழகமாகும். உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகம் இந்த பெருமையை பெற்றுள்ளது.
ரூ.1,000 வெகுமதி.. 4 நாள் விடுமுறை
விழா முடிந்ததும் அணிவகுப்பில் பங்கேற்ற அதிகாரிகள், காவல்துறையினருடன் டிஜிபி சைலேந்திரபாபு பேசினார். அப்போது, அவர்களுக்கு ரூ.1,000 வெகுமதி வழங்கப்படும் என்றும், இன்றுமுதல் 4 நாட்கள் விடுப்பு அளிக்கப்படுவதாகவும், வெள்ளிக்கிழமை பணிக்கு திரும்பினால் போதும் என்றும் டிஜிபி அறிவித்தார்.