புதுடெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை கண்டறிய 6 மாநிலங்களில் தேசியப்புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
பிஹாரில் செயல்பட்ட தீவிரவாத குழுவினர், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு பாட்னாவில் ஆயுத பயிற்சி வழங்கி உள்ளனர். இந்தஆயுத பயிற்சியில் பங்கேற்றவர்களை கண்டறிய தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக மத்திய பிரதேசம், குஜராத், பிஹார், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
உத்தர பிரதேசத்தில் பரூக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தில் நடத்திய சோதனையில் ஜலீல் என்பவர் பிடிபட்டுள்ளார். அவரிடமும் தீவிரவிசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறும்போது, “ஆகஸ்ட் 15-ம்தேதி சுதந்திர தினத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதை கருத்தில்கொண்டு நாடுமுழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகிறோம். இதில் பலர் சிக்கியுள்ளனர். முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன” என்று தெரிவித்தன.
சேலத்தில் விசாரணை
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள ஏ.பள்ளிப்பட்டியைச் சேர்ந்த ஆசிக், சேலம் கோட்டை பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து வெள்ளிப் பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்தார். இவர் தீவிரவாத செயல்பாடுகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்துள்ளார். இதை கண்காணித்து வந்த என்ஐஏ அதிகாரிகள், நேற்று முன்தினம் சேலம் வந்து ஆசிக்கை கைது செய்து டவுன் போலீஸில் ஒப்படைத்தனர்.
சேலம் டவுன் போலீஸார் ஆசிக்கை சட்டவிரோத செயல்பாடுகள் தடை சட்டத்தின்கீழ் கைதுசெய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். ஆசிக் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்திய என்ஐஏஅதிகாரிகள், அவர் பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்தனர். அதில் உள்ள விவரங்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.