ஒரு குடும்பத்தில் ஒரே ஒருவர் ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரி ஆவது என்பதே இந்தியாவில் மிகவும் அரிதாக காணப்படுகிறது.
அதுவும் ஏழை எளிய நடுத்தர குடும்பத்தில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆவது என்பது கனவாகவே போய்விடுகிறது.
ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நடுத்தர வர்க்கத்து குடும்பத்தில் உள்ள நான்கு பேர்களும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி ஆகி உள்ளனர் என்பது பெரும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து தற்போது பார்ப்போம்.
நடுத்தர மக்களின் கனவு உடைந்தது.. இனி சமாளிக்க முடியாது, புலம்பும் மக்கள்..!
ஒரே குடும்பத்தில் 4 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்
உத்தரபிரதேசத்தின் லால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், நான்கு உடன்பிறப்புகள் அதாவது இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். மிகவும் ஏழ்மையில் வளர்ந்தவர்கள், UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று இன்று அதிகாரிகளாக உள்ளனர்.
அனில் பிரகாஷ் மிஸ்ரா
உத்தரபிரதேச மாநிலத்தில் கிராம வங்கியில் மேலாளராக இருந்த அனில் பிரகாஷ் மிஸ்ரா என்பவரின் 4 குழந்தைகள் தான் இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக உள்ளனர். இதுகுறித்து அனில் பிரகாஷ் மிஸ்ரா கூறியதாவது: நான் கிராம வங்கியில் மேலாளராக இருந்தபோதும், எனது குழந்தைகளின் கல்வித் தரத்தில் சமரசம் செய்து கொள்ளவில்லை. அவர்களும் படிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தனர். எனது குழந்தைகளுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என விரும்பினேன், எனது விருப்பத்தை இன்று அவர்கள் பூர்த்தி செய்துள்ளனர்’ என்று கூறியுள்ளார்.
மூத்தவர் ஐஏஎஸ் அதிகாரி
நான்கு உடன்பிறப்புகளில் மூத்தவரான யோகேஷ் மிஸ்ரா ஒரு ஐஏஎஸ் அதிகாரி. அவர் தனது ஆரம்பக் கல்வியை லால்கஞ்சில் முடித்தார். பின்னர் மோதிலால் நேரு நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில் பொறியியல் படித்தார். அவர் நொய்டாவில் வேலைக்குச் சேர்ந்தாலும், அவரது கனவு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது தான். அதனால் அவர் சிவில் சர்வீசஸுக்கு தயாரானார். 2013-ம் ஆண்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரியானார். அவரது கனவும் நனவானது
இரண்டாவது சகோதரி க்ஷமா மிஸ்ரா
இந்த குடும்பத்தின் இரண்டாவது குழந்தையான க்ஷமா மிஸ்ரா, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாரான போது முதல் மூன்று முயற்சிகளில் தோல்வி அடைந்தார். ஆனால் அவரது தந்தை மற்றும் மூத்த சகோதரர் கொடுத்த ஊக்கம் அவர் தனது நான்காவது முயற்சியில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று இப்போது ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளார்.
மூன்றாவது சகோதரி மாதுரி மிஸ்ரா
மூன்றாவது உடன்பிறந்த மாதுரி மிஸ்ரா, லால்கஞ்சில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, முதுகலைப் படிப்பதற்காக அலகாபாத் சென்றார். இதற்கு பிறகு, அவர் வேலைக்கு செல்ல முயற்சிக்காமல் தனது சகோதரர், சகோதரி போல் UPSC தேர்வுக்கு தயாரானார். 2014ஆம் ஆண்டு தனது யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார்.
கடைக்குட்டி லோகேஷ் மிஸ்ரா
நான்காவது மற்றும் கடைக்குட்டி சகோதரர் லோகேஷ் மிஸ்ராவுக்கு தனது சகோதர, சகோதரிகள் போல் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும் என்பதை சொல்லவே தேவையில்லை. கடின உழைப்பின் மூலம் கடந்த 2015ஆம் ஆண்டு UPSC தேர்வில் 44 வது இடத்தைப் பிடித்தார். இன்று அவர் ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளார்.
தனது நான்கு குழந்தைகளையும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக மாற்றிய இவர்களது தந்தை அனில் பிரகாஷ் மிஸ்ரா பெருமைக்குரிய தந்தையாக அந்த பகுதியில் பார்க்கப்படுகிறார்.. என்னுடைய குழந்தைகளால் நான் இன்று தலைநிமிர்ந்து இருக்கின்றேன் என்று பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
4 Brothers and Sisters From UP pass Civil Services Exam, All Serve As IAS, IPS Officers!
4 Brothers and Sisters From UP pass Civil Services Exam, All Serve As IAS, IPS Officers!| குடும்பமே ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள்… எந்த மாநிலத்தில் தெரியுமா?