மூணாறு : கேரளாவில் இன்று (ஆக.,1) முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்தாண்டு தென் மேற்கு பருவமழை மே 29 துவங்கியது. கடந்தாண்டுகளை போன்று இந்தாண்டும் ஜூனில் மழை 53 சதவீதம் குறைவாக பதிவானது. ஜூலையில் முதல் இரண்டு வாரம் வட மாவட்டங்களில் மட்டும் பலத்த மழை பெய்த போதும் சராசரி அளவை விட 26 சதவீதம் குறைவு என கணக்கிடப்பட்டது. வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் மழை சற்று அதிகம் பதிவானது.
இந்நிலையில் மாநிலத்தில் இன்று முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நேற்று இடுக்கி, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘எல்லோ அலெர்ட்’ விடப்பட்டது.
இன்று வயநாடு மாவட்டம் தவிர எஞ்சிய 13 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக ஆக., 2, 3 ல் கன மழைக்கு வாய்ப்புள்ளதால் ஆக.,2ல் திருவனந்தபுரம் முதல் திருச்சூர் வரை எட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்டும், எஞ்சிய மாவட்டங்களுக்கு எல்லோ அலெர்ட்டும் விடப்பட்டுள்ளது.
ஆக., 3ல் திருவனந்தபுரம், காசர்கோடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு எல்லோ அலெர்ட்டும், மீதமுள்ள 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்டும் விடப்பட்டுள்ளது. இந்தாண்டு ஆகஸ்ட்டில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையமும், பல்வேறு தனியார் ஏஜென்சிகளும் அறிவித்துள்ளதால் அதனை எதிர்கொள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement