பத்ரா சாவுல் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத்தை, வரும் 4 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு, மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது.
1,034 கோடி ரூபாய் நில மோசடி தொடர்பான வழக்கில், சிவசேனா மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இம்மாத தொடக்கத்தில் அமலாக்கத் துறை முன்பு சஞ்சய் ராவத் நேரில் ஆஜரானார். அவரிடம் இந்த வழக்கு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்கிடையே நேற்று காலை 7 மணி அளவில், இந்த வழக்கு தொடர்பாக, மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் உள்ள சஞ்சய் ராவத்தின் வீட்டில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பல மணி நேர சோதனைக்கு பிறகு, சஞ்சய் ராவத்தை கைது செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள், அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இன்று, மும்பையில் உள்ள நீதிமன்றத்தில், சஞ்சய் ராவத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது, அவரை எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றத்திடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் அனுமதி கோரினர்.
இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், “இதுவரை நடந்த விசாரணை மற்றும் அதில் கண்டறியப்பட்ட உண்மைகளின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற முடிவு சரியானது. ஆனால் எட்டு நாட்கள் வழங்க முடியாது. நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது” என உத்தரவிட்டது.
இதற்கிடையே, சிவசேனா கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிவசேனா கட்சியினரும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.