மும்பை: கொலை மிரட்டல் வந்ததை அடுத்து, நடிகர் சல்மான் கான் துப்பாக்கி வைப்பதற்கான லைசென்ஸ் பெற்றார். கடந்த மே 29ம் தேதி பஞ்சாபி பாடகர் சித்து முஸேவாலா சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் என்பவன், சல்மான் கானுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினான். அதில், உனக்கும் இந்த கதிதான் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதே போன்ற மிரட்டல் சல்மானின் அப்பா சலீம் கானுக்கும் விடுக்கப்பட்டது. இதையடுத்து தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும் என மும்பை போலீஸ் கமிஷனரை சந்தித்து சல்மான் கான் கோரிக்கை வைத்தார். இதற்காக சல்மானுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதையடுத்து அவருக்கு பாதுகாப்புக்காக துப்பாக்கி வைப்பதற்கான லைசென்ஸை மும்பை காவல்துறை நேற்று வழங்கியது. ஏற்கனவே குண்டு துளைக்காத கார் பயன்படுத்தவும் சல்மான் கான் தொடங்கியுள்ளார். இந்நிலையில் தனது தனியார் பாதுகாப்பையும் அவர் அதிகரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.