நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில், குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அங்கு சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
உலகளவில், 75 நாடுகளில் குரங்கு அம்மை நோயால், 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம், குரங்கு அம்மை தொற்று நோய் தொடர்பாக, சர்வதேச சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. உலக நாடுகள் குரங்கு அம்மை நோயை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக, அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரம், குரங்கு அம்மையையொட்டி சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டு, நியூயார்க் கவர்னர் எரிக் ஆடம்ஸ் பேசியதாவது:நியூயார்க்கில் குரங்கு அம்மை தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போது, 1.50 லட்சம் பேர் குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளாக வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனால், சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக, குரங்கு அம்மை நோய் தடுப்புக்கான ஊசி மருந்துகள் வினியோகம் பரவலாக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்புக்கு உரிய சிகிச்சைகளை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது பிறப்பித்துள்ள அவசர நிலையால், குரங்கு அம்மை பரவல் வேகம் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் பேசினார். உலகளவில் குரங்கு அம்மை நோய்க்கு, இதுவரை ஐந்து பேர் பலியாகி உள்ளனர்.
பைடனுக்கு மீண்டும் கொரோனா
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன், அவர் தனிமை அறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில், ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, வெள்ளை மாளிகை டாக்டர் கெவின் ஒ கன்னார் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து குணமானோருக்கு, மிக அபூர்வமாக சில தினங்களில் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஜோ பைடனுக்கும் அதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ”அவர் பூரண குணமடையும் வரை, மீண்டும் தனிமையில் இருப்பார்,” என, கெவின் ஓ கன்னார் கூறினார். கொரோனா பாதிப்பிற்கு இடையிலும், ஜோ பைடன் அரசு பணிகளை கவனித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement