“டி.டி.வி, ஓ.பி.எஸ் சந்திப்பு தொண்டர்களின் விருப்பத்தின்படி இருக்கும்!" – ரவீந்திரநாத் எம்.பி

தென்காசி மாவட்டம், சங்கரன்கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேனி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ராஜபாளையத்தில் அவர் ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, “கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க முடியாது. தமிழகத்தை பொறுத்தவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒன்றரை கோடி விஸ்வாசமிக்க தொண்டர்கள் உள்ளனர். அவர்கள் இந்த இயக்கத்தை மேலும் வளர வைக்க எந்த ஒரு பிரதிபலனும் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களை போன்ற ஒரு எளிய தொண்டன்தான் தலைமை பொறுப்புக்கு வர முடியும்.

ரவீந்திரநாத் எம்.பி.

தலைமைக் கழகம் யாருக்கு சொந்தம் என்று தற்போது தெளிவுபடுத்த முடியாத நிலை உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி தலைமைக் கழக அலுவலகத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேல் முறையீடு செய்துள்ளோம். இந்த வழக்கு இரண்டு வாரங்களில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு, அ.தி.மு.க-வில் உள்ள எளிய தொண்டனின் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் வண்ணம் அமையும் என நம்புகிறோம். தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது. கட்சியில் என்னுடைய பங்களிப்பு குறித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்வார். டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இருவரின் சந்திப்பு இதுவரை நடைபெறவில்லை. ஆகவே அவர்களுக்கிடையே சந்திப்பு நடக்குமா என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாது. அதுபோல், டி.டி.வி‌.தினகரன்-ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு என்பது தொண்டர்களின் விருப்பத்தை பொறுத்தே இருக்கும்.

ஃபைல் படம்

தமிழகத்தில் உள்ள 40 எம்.பி-க்களில் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் நான்தான். டெல்லியை பொறுத்தவரை 540 எம்.பி-க்களில் அ.தி.மு.க ஜீரோ என்ற இடத்தில் இல்லாமல் ஒரு எம்.பி இருக்கிறார் என்ற கௌரவமான நிலை உள்ளது. எனவே கட்சியில் நடந்து வரும் கருத்து வேறுபாடுகளை தாண்டி தற்போது வரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்.பி-யாகத்தான் டெல்லியில் நான் பணியாற்றி வருகிறேன். அ.தி.மு.க பொதுக்குழு குறித்தோ அல்லது அதன் செயல்பாடுகள் குறித்தோ தற்போது எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.