பெங்களூரு : தபால் மூலம் ராக்கி அனுப்புவது அதிகரிக்கிறது. இம்முறை 5,000 ராக்கிகள் தபால் வழியாக அனுப்பப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.சகோதர, சகோதரிகளிடையே, பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை, வரும் 11ல் கொண்டாடப்படுகிறது. சகோதரிகள், தங்களின் சகோதரரின் கையில் ராக்கி கட்டுவது வழக்கம். இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவியதால், எந்த நிகழ்ச்சியும் சிறப்பாக கொண்டாடவில்லை.
இவர்களின் வசதிக்காக, தபால் வழியாக ராக்கிகள் அனுப்ப கர்நாடக தபால்துறை வசதி செய்தது. இம்முறையும் ராக்கிகள், வாழ்த்து அட்டைகள் அனுப்பலாம். இதற்காக தபால் துறை, www.karnatakapost.gov.in என்ற இணையதளம் துவக்கியுள்ளது.கர்நாடகாவில் உள்ள சகோதரிகள், வீட்டில் அமர்ந்தபடி, நாட்டின் எந்த பகுதியில் வசிக்கும் சகோதரனுக்கு, விரைவு தபால் வழியாக ராக்கி அனுப்பலாம். இம்முறை 5,000 ராக்கிகள் அனுப்ப வாய்ப்புள்ளது.தபால் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கொரோனா நேரத்தில், துவங்கப்பட்ட இந்த திட்டம் மக்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. பலர் திட்டத்தை பயன்படுத்தினர். முந்தைய ஆண்டு, 2,000 ராக்கிகள், வாழ்த்து அட்டைகள் அனுப்பப்பட்டன.நடப்பாண்டு அதிகமான சகோதரிகள், ஆர்டர் செய்ய துவங்கியுள்ளனர். 5,000 ராக்கிகள் அனுப்ப வாய்ப்புள்ளது.
தபால் துறை துவங்கிய இணையதளத்தில் தொடர்பு கொண்டால், பொது சேவைகள் என்ற பிரிவில் ரக்ஷா பந்தன்/ ராக்கி போஸ்ட் இருக்கும். அதை கிளிக் செய்தால், ராக்கி போஸ்ட் பக்கம் திறக்கும்.அந்த பக்கத்தில், ராக்கி அனுப்பும் நபர், அதை பெறும் சகோதரனின் முழு விபரங்களை நிரப்ப வேண்டும். அங்கு பல வடிவங்களில் ராக்கி, வாழ்த்து செய்திகள் கொண்ட அட்டைகளை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின், நெட் பேங்கிங், கூகுள் பே, பீம் செயலி, போன் பே என மற்ற வழிகளில் நிர்ணயித்த கட்டணம் செலுத்த வேண்டும்.ஆகஸ்ட் 6க்குள் அனுப்பினால் மட்டுமே, பண்டிகை நாளன்று சகோதரனுக்கு ராக்கி, வாழ்த்து அட்டைகள் சென்றடையும். ராணுவ வீரர்களுக்காகவே, தனியாக சிறப்பு ராக்கிகள், வாழ்த்து அட்டைகளை அனுப்பலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement