சென்னை: “தமிழகத்தைப் பொருத்தவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. குரங்கு அம்மை பாதிப்பு யாருக்காவது ஏற்பட்டால், அடுத்த விநாடியே ஊடகவியலாளர்களை அழைத்து நான் தெரிவிப்பேன்.
காரணம் ஒரு நோய் பாதிப்பை பொதுமக்கள் உணர்ந்து கொண்டால்தான், அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். எனவே எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:”மதுரையைப் பொருத்தவரை மழைக்காலம் முடிந்தவுடன் அங்கு மழைக்கால சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அதுமட்டுமின்றி நடமாடும் வாகனங்கள் மூலம் மருத்துவ உதவிகள் செய்வதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஊகத்தின் அடிப்படையில், குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. குரங்கு அம்மை பாதிப்பு யாருக்காவது ஏற்பட்டால், அடுத்த விநாடியே ஊடகவியலாளர்களை அழைத்து நான் தெரிவிப்பேன். காரணம் ஒரு நோய் பாதிப்பை பொதுமக்கள் உணர்ந்து கொண்டால்தான், அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். எனவே எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, சென்னை,கோவை, மதுரை மற்றும் திருச்சியில் உள்ள 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும், வெளிநாட்டிலிருந்து வருபவர்களை, அவர்களது வெப்பநிலை உள்ளிட்டவை பரிசோதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, குரங்கம்மை பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய முகத்திலும், முழங்கைக்கு கீழும் ஏதாவது மாற்றங்கள் தெரிகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.