தருமபுரி அருகே லாரி பட்டறையில் நிறுத்தி வைத்திருந்த டாரஸ் லாரியின் டீசல் டேங்க் வெடித்ததில் இரண்டு லாரிகள் ஒரு இருசக்கர வாகனம் எரிந்து நாசமானது.
தருமபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பென்னாகரம் மேம்பாலம் அருகே பச்சையப்பன் என்பவர் லாரி பட்டறை வைத்துள்ளார். இந்த பட்டறையில் தருமபுரியைச் சேர்ந்த மணி என்பவர் லாரியை பழுது பார்க்க விட்டுள்ளார். ஆனால், லாரி பழுது நீக்கியும், எடுக்க வராததால் லாரி பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை கர்நாடகாவில் இருந்து திருநெல்வேலிக்கு லாரியை ஓட்டிச்சென்ற சௌகர் நந்தகுமார் என்பவர் லாரி பட்டறையில் லாரியை நிறுத்திவிட்டு பணம் எடுக்க ஏடிஎம்-க்கு சென்றுள்ளார். அப்போது திடீரென லாரியில் இருந்து வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இதனை அறிந்த லாரி ஓட்டுநர் டயர் வெடித்ததோ என்று அச்சத்தில் பார்த்துள்ளார். ஆனால் டீசல் டேங்க் வெடித்து, தீப்பிடித்து எறியத் தொடங்கியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த லாரி ஓட்டுநர் மற்றும் அங்கிருந்தவர்கள் அங்கிருந்து ஓடிச் சென்றனர். இதையடுத்து தீ அருகில் இருந்த லாரி மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு பரவி மளமளவென எரியத் தொடங்கியது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தருமபுரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி முழுவதுமாக எரிந்து சேதம் ஆனது. ஆனால், தீயை கட்டுப்படுத்த முடியாததால், தீயணைப்பு வீரர்கள் இரண்டு வண்டிகளை வரவழைத்து தீயை அனைத்தனர். இதில், லாரி பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 லாரி மற்றும் ஒரு இருசக்கர வாகனம் முழுவதுமாக எரிந்து சேதமானது.
இந்த தீ விபத்து குறித்து தருமபுரி நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM