”தாழ்வான மின்கம்பிகளை சரி செய்யாததால் மாதம் ஒரு யானை பலி ஆகிறது” – நீதிபதிகள் வேதனை

தமிழக வனப்பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்ய எடுத்த நடவடிக்கை குறித்து செப்டம்பர் 9ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிர்வாக இயக்குனர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரிசெய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த உத்தரவு தமிழகம் முழுவதற்கும் பொருந்தும் எனத் தெரிவித்தனர்.
image
மேலும், வனப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்யாததால் மாதம் ஒரு யானை பலியாவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், இந்த உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இல்லாவிட்டால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிர்வாக இயக்குனர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர்.
image
மற்றொரு வழக்கில் வனத்துறையினரை 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்திய நீதிபதிகள், அப்படி தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்ற அனுமதிப்பதால் அவர்கள் சட்டவிரோத கும்பல்களுக்கு உடந்தையாக செயல்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.
பின்னர், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்கள் எத்தனை பேர்? இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர் என அறிக்கை அளிக்க வனத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.