தென்மேற்கு பருவகால நிலை காரணமாக இன்று (01) முதல் எதிர்வரும் 06ஆம் திகதி வரை நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்தார்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக் கூடுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், இந்த நாட்களில் 50 முதல் 60 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் எனவும், நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளிலும் மழை பெய்யக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பருவமழையுடன் காற்றின் வேகமும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
பருவமழை காரணமாக வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாகவும் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 40 வீதம் வரை அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) எஸ்.பி.சி.சுகீஸ்வர தெரிவித்தார்.
கடந்த நாட்களில். மகாவலி மற்றும் நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 38 வீதமாக குறைந்திருந்ததமை குறிப்பிடத்தக்கது..