பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் காவிக்கொடியை பறக்கவிட திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. ஆனால், தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் அக்கட்சிக்கு சிம்மசொப்பனமாக இருக்கின்றன. அந்த வரிசையில் தெலங்கானா மாநிலமும் இப்போது சேர்ந்துள்ள நிலையில், பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
அந்த கூட்டத்தின் செயல்பாடுகள், பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் தவிர கூட்டத்தின் இடம்பெற்ற பாஜவைன் உத்திகள், அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தெலங்கானா மாநிலத்தில் கட்சியின் விரிவாக்கத்திற்கான வலுவான முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வருவதை காட்டுகிறது.
தாமரையின் வளர்ச்சி
தென் மாநிலங்களில் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்துள்ள பாஜக, தெலங்கானா மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வரும் நிலையில், அந்த மாநிலத்தின் மீது கவனம் செலுத்தும் அக்கட்சியின் முடிவு ஆச்சரியப்படுவதற்கில்லை. முந்தைய தேர்தல்களில் பாஜகவின் வாக்கு வங்கி குறைவாக இருந்தாலும், அம்மாநிலத்தில் அக்கட்சி கணிசமாக வளர்ந்திருக்கிறது. 2018 சட்டமன்றத் தேர்தலில், பாஜக 7 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. அடுத்த ஆண்டு, மோடி அலை இந்தியாவில் வீசியபோதும், தெலங்கானா அசையாமல் இருந்தது; பாஜகவின் வாக்கு வங்கியும் மாறவில்லை.
இருந்தபோதும், பாஜக அம்மாநிலத்தில் வளர்ந்து வருவது தெளிவாக தெரிகிறது. 2019ஆம் ஆண்டில் அக்கட்சியால் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் முதல்வரின் மகளைத் தோற்கடிக்க முடிந்தது. 2020 ஆம் ஆண்டில், கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் பாஜகவின் வெற்றி அபரிமிதமானது. மாநிலத்தின் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கு கிடைத்த 55 இடங்களுடன் ஒப்பிடும்போது, முந்தைய தேர்தலில் வெறும் 4 இடங்களை மட்டுமே பெற்றிருந்த பாஜக, 48 இடங்களில் வெற்றி வாகை சூடியது.
என்ன காரணங்கள்
பாஜகவின் இந்த திடீர் எழுச்சிக்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதலில், 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பிறகு தென் மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்த பாஜக கடுமையாக உழைக்கிறது. ஐந்து திராவிட மொழி பேசும் மாநிலங்களில் அக்கட்சிக்கு இருக்கும் மக்களவை தொகுதிகள் முன்னேற்றத்திற்கான வெளிப்பாடு. உதாரணமாக, ஜூலையில், தென்னிந்தியாவில் இருந்து நான்கு பிரபலங்களை ராஜ்யசபாவிற்கு பாஜக பரிந்துரைத்தது. இந்த கணக்கீட்டின்படி, கர்நாடகாவிற்குப் பிறகு பாஜகவுக்கு ஏற்கனவே செல்வாக்கு இருக்கும் தெலங்கானா மாநிலம் அக்கட்சியின் விரிவாக்கத்திற்கு ஏதுவான இடத்தை வழங்குகிறது.
இரண்டாவதாக, தெலங்கானா மாநில முதல்வராக எட்டு ஆண்டுகளாக சந்திரசேகர ராவ் இருக்கிறார். இந்த நீண்ட பதவிக்காலம் இயல்பாகவே ஆட்சிக்கு எதிரான மனநிலையை மக்களிடம் ஏற்படுத்தும். மேலும், கேசிஆரின் பிம்பத்தை உடைக்கும் முயற்சிகளிலும் பாஜக ஈடுபட்டு வருகிறது. அவரது கட்சியை குடும்ப கட்சி என்று விமர்சிக்கும் பாஜக, முதல்வரின் நெருங்கிய உறவினர்கள் முக்கிய கட்சி மற்றும் அதிகாரமிக்க பதவிகளை வகிப்பதை சுட்டிக்காட்டி வருகிறது.
மூன்றாவது, காங்கிரஸ் கட்சியின் தடுமாற்றம். நாடு முழுவதுமே நலிவடைந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தெலங்கானா மட்டும் விதிவிலக்கல்ல இருப்பினும், தெலங்கானாவில் எந்தவொரு எதிர்க்கட்சியையும் நசுக்கும் கேசிஆர் முயற்சிக்கு காங்கிரஸும் பலிகடாவாகியுள்ளது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பெருமளவில் கட்சி தாவுவதை டிஆர்எஸ் கட்சி அடிக்கடி செய்துள்ளது. இதே உத்தியை வழக்கமாக கையாளும் மத்தியில் அதிகாரம் படைத்த பாஜக தெலங்கானாவிலும் இந்த தந்திரத்தை பயன்படுத்தும். இதன் விளைவாகவே, பாஜக மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கிறது.
மம்தாவின் மேற்குவங்க ஸ்டைல் கைக்கொடுக்குமா?
பாஜகவை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான உத்தியை மேற்குவங்கத்தில் இருந்து அவர் எடுப்பதாக தெரிகிறது. கடந்த முறை சட்டமன்றத்தை கலைத்து விட்டு முன்னரே தேர்தலை சந்தித்த சந்திரசேகர ராவ், அந்த சமயத்தில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். அதன்பிறகு அமைதியாகி விட்டார். தற்போதும், மீண்டும் அங்கு தேர்தல் வரவுள்ளதால், முன்பை விட பாஜக மீது அதிக சீற்றத்தை அவர் காண்பித்து வருகிறார். மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சிக்கிறார். கூட்டாட்சி முறையைப் பயன்படுத்தி, தெலங்கானா டெல்லியால் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி வருகிறார். பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் மாநில முதல்வர் என்ற முறையில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கிறார்.
பாஜகவின் பலத்திற்குப் பயன்படும் வகுப்புவாதம் மற்றும் இந்துத்துவா அல்லாமல், மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி போலவே கூட்டாட்சிவாதம் போன்ற விஷயங்களை கேசிஆர் நம்புவதாக தெரிகிறது. அவருக்கும் மோடிக்கும் இடையேயான போட்டியாக எதிர்வரவுள்ள தேர்தலை அவர் பார்ப்பதாக தெரிகிறது. ஆனால், எட்டு ஆண்டுகால பதவி மீதான அதிருப்தி, குடும்ப ஆட்சி, ஊழல் விவகாரங்களில் அவருக்கு சங்கடங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
கேசிஆருக்கு தெலங்கானாவில் இருக்கும் மாஸ்
தெலங்கானா மக்களுக்கான ஜனரஞ்சக திட்டங்களால் அம்மாநில மக்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கு அதிகரித்துள்ளது. உண்மையில், மாநிலத்தின் சாதனை மிகவும் சிறப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. தெலங்கானா மாநிலத்தின் திட்டங்களை பல சமயங்களில் மத்திய அரசு செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. விவசாயிகளுக்கு ரொக்க உதவித்தொகை வழங்கும் பிரதமர் மோடியின் பிரபலமான திட்டம். சந்திரசேகர ராவால் “ரிது பந்து” என்று ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டம். மத்திய அரசின் குடிநீர்த் திட்டமான ஜல் ஜீவன் முதன்முதலில் தெலங்கானாவால் பரவலாகப் பாராட்டப்பட்டது.
கேசிஆரின் இரண்டாவது ஆட்சிகாலத்தில் விவசாய பாசனத்தில் டிஆர்எஸ் கட்சி கூடுதல் கவனம் செலுத்தியது. தெலங்கானா உருவானதில் இருந்து, மாநிலத்தில் சாகுபடி பரப்பு கிட்டத்தட்ட 60 சதவீதம் உயர்ந்துள்ளதாக அம்மாநில அரசு கூறுகிறது. இதுபோன்ற செயல்களின் விளைவாக, எட்டு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிறகும், சந்திரசேர ராவுக்கான செல்வாக்கு நம்பமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உதாரணமாக, ‘திடீர் தேர்தல் நடத்தப்பட்டால், டிஆர்எஸ் கட்சி வெற்றி பெறும் எனவும், காங்கிரஸை வீழ்த்தி பாஜக இரண்டாவது இடத்தைப் பிடிக்கும்.’ எனவும் ஜூலை மாதம் வெளியிடப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதிலிருந்து, மேற்குவங்கத்தை போலவே முக்கிய எதிர்க்கட்சியாக மாறுவதற்கு பாஜக சிறப்பாகச் செயல்பட்டாலும், கேசிஆரை வீழ்த்த இன்னும் சிறிது காலம் பாஜக காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதே தெரிகிறது.