தெலுங்குப் பட உலகில் இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏன் இந்த திடீர் ஸ்டிரைக், அங்கே தியேட்டர்கள் மூடப்பட்டதா, படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரித்தோம்.
டோலிவுட் ஹீரோக்களின் சம்பளம் பெரிய அளவில் உள்ளது, படத்தின் பட்ஜெட் மிக அதிகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. ஹீரோக்கள் தங்களின் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும், சம்பளத்தை மொத்தமாக முதலிலேயே வாங்கி வைத்துக்கொள்ளக் கூடாது. ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தின் முதல் பாதியைப் படம் ஆரம்பிக்கும் முன்னரும், மீதிப் பாதியை மொத்தப் படப்பிடிப்பும் முடிந்த பின்னரும் வாங்கிக்கொள்ள வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி அங்கே ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உண்மையில் எதனால் இந்த ஸ்டிரைக், எங்கிருந்து ஆரம்பித்தது இந்தப் பிரச்னை, அங்கே நிலவரம் என்ன என்பது குறித்து ஒளிப்பதிவாளர் ஆர்.மதியிடம் விசாரித்தேன். பிரபாஸின் ‘சாஹோ’, மகேஷ்பாபுவின் ‘ஶ்ரீமந்துடு’, ‘சர்க்காரு வாரிப்பாட்டா’ ஆகிய பிரமாண்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் இவர்.
”நேத்து வரைக்குமே ஸ்டிரைக் வேணுமா வேணாமான்னு எந்த முடிவும் எடுக்காமல் இருந்தாங்க. இந்தச் சூழலில்தான் இன்று ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஹீரோக்களின் சம்பளம் குறித்து இந்தப் பிரச்னை ஆரம்பிக்கவில்லை. பொதுவாகவே படங்களின் பட்ஜெட் அதிகரிக்கிறது என்றும், செலவைக் கட்டுப்படுத்துவது எப்படி என்றும் பேச்சுவார்த்தை சில மாதங்களாகவே நடந்துவருது. இந்நிலையில் லைட்மேன் சங்கத்தினர் தங்கள் ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தை பலனளிக்காமல் போன பின்தான், படங்களுக்கான பட்ஜெட் அதிகமாகுதுன்னு பேச்சு கிளம்பியது. பிரமாண்ட படங்களுக்கு மட்டும்தான் தியேட்டர்கள்ல இப்போ கூட்டம் வருது.
சின்ன, நடுத்தரப் படங்களுக்கு தியேட்டர்களில் கூட்டம் இல்லை. லாபம் வர மாட்டேங்குன்னு சொல்றாங்க. செலவை எப்படிக் கட்டுப்படுத்தலாம்னும் தீவிரமா பேசிட்டு வராங்க. அதிகாரபூர்வமாக இன்று ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு நிறுத்துவது குறித்து நேற்று வரை யாரும் யோசிக்கலை. ஆனா, ஸ்டிரைக் அறிவித்துள்ளதால் படப்பிடிப்பை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரிய ஹீரோக்கள் மட்டுமல்ல, சாதாரண நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவருக்குமே சம்பளம் குறைப்பது குறித்த பேச்சு வார்த்தையும் தயாரிப்பாளர்களிடையே நடந்துவருது” என்றார் மதி.
நம்மூர் இயக்குநர்கள் ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் ‘ஆர்.சி.15’ படம், வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதண்யா நடிக்கும் படம், மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துவரும் ‘காட்ஃபாதர்’ ஆகிய படங்களும் அங்கே நடந்துவருகின்றன. இதில் ராம்சரண் படத்தை விரைவாக முடித்துவிட்டு ‘இந்தியன்2’டிற்குள் அவர் வந்துவிடுவார் எனச் சொல்லப்பட்டது. இந்தத் திடீர் அறிவிப்பினால் நம்மூர் இயக்குநர்களின் ஷெட்யூல்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.