பல்லாவரம் அருகே திரிசூலத்தில் கோயில் இடத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளுக்கு இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் ஊராட்சி, சிவசக்தி நகரில் திரிசூல நாதர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்குச் சொந்தமாக, 61.4 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை ஆக்கிரமித்து, 1,257 வீடுகள் கட்டப்பட்டு, மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் முறையாக வரி மற்றும் வாடகை செலுத்தாததால், இந்த இடத்தை கோயில் இடமாக அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன்பேரில் முதல்கட்டமாக, 54 வீடுகளை காலி செய்து அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க நீதிமன்றம்உத்தரவிட்டது. ஆக்கிரமிப்பாளர்களின் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தள்ளிவைக்கப்பட்டது.
முதல்கட்டமாக கடந்த ஜூன் மாதம், 3 கடை, 10 வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து 2-வது கட்டமாக, அறநிலையத் துறை செயல் அலுவலர் சக்தி தலைமையில் ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு சீல் வைக்க நேற்று சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த பலர் ஒன்று திரண்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, 13 வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் அகற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதேபோல் 3-வது கட்டமாகவும் பல வீடுகளுக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.