சென்னை: பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார். தமிழக காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, குடியரசுத்தலைவர் கொடியை முதல்வர் ஸ்டாலின் வாயிலாக காவல் துறைக்கு வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: நாட்டின் சிறந்த காவல் துறைகளில் தமிழக காவல் துறையும் ஒன்று. இந்திய ராணுவம் அல்லதுமாநில காவல் துறைக்கு வழங்கப்படும் உயர்ந்த கவுரவத்தைப் பெற்ற சில மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இணைந்துள்ளது.
இது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமையாகும். மேலும், தமிழக காவல் துறையினரின் அர்ப்பணிப்பு, தொழில் நேர்மை, தன்னலமற்ற சேவை, தியாகத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் இது.
நெருக்கடியான காலகட்டங்களிலும், ஒடுக்கப்பட்ட மற்றும் நலிந்தபிரிவினருக்கு பாதுகாப்பு வழங்குவதிலும், சமூக நல்லிணக்கத்தையும், பொது அமைதியையும் பேணவும் காவல் துறை உதவுகிறது.
நாட்டிலேயே அதிக மகளிர்காவல் நிலையங்கள், பெண் காவலர்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. அதேபோல, முதல் பெண் கமாண்டோ பிரிவும்தமிழகத்தில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவம், பெண்களுக்கு சமஉரிமை என்ற இலக்கைநோக்கிய இந்த சாதனைகள் பாராட்டுக்குரியவை.
பெண்களைப் பாதுகாப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்வது மகிழ்ச்சிஅளிக்கிறது. பெண்களுக்கு எதிரானக் குற்றங்களைக் கையாள்வதில் போலீஸார் கூடுதல் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும்.
ஆன்லைன் குற்றங்கள்
இன்றைய சூழலில், இணையதளக் குற்றங்கள், ஆன்லைன் மோசடிகள், எல்லை தாண்டிய குற்றங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
இதுபோன்ற குற்றங்களை எதிர்கொள்ள, பயிற்சி மற்றும் நவீன வசதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அந்த அடிப்படையில் 46 இணைய காவல் நிலையங்களுடன், தமிழக காவல் துறையில் இணைய குற்றங்களுக்கான தனிப்பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, விலை மதிப்பற்ற 10 சிலைகளை அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு வந்துள்ளது பாராட்டத்தக்கது.
ஏறத்தாழ 1,076 கி.மீ. நீளம்கொண்ட கடற்கரையைக் கொண்டதமிழகம், மீனவர்கள் பாதுகாப்பு,எல்லை தாண்டிய நடவடிக்கைகளை தடுப்பதற்காக கடலோரக் காவல் குழுமத்தைக் கொண்டுள்ளது.
மருத்துவம், கல்வி உதவி
காவலர்களின் மன உறுதிக்காக தமிழகத்தில் பல்வேறு நலத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மன அழுத்தம், மதுப் பழக்கம் மற்றும் தற்கொலைகளைத் தடுக்க காவலர் நலத் திட்டங்களை நாட்டிலேயே முதல்முறையாக தமிழகம் தொடங்கியுள்ளது.
காவல்துறையினர் மற்றும் அவர்களதுகுடும்பத்தினருக்கு மருத்துவக்காப்பீடு, கல்வி உதவித் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. மற்ற மாநிலங்களும் இதைப் பின்பற்ற வேண்டும்.
தற்போது தமிழகம் நாட்டிலேயே மிகவும் வளமான, தொழில்மயமான மாநிலமாக உள்ளது. பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமான பொது அமைதி, சமூக நல்லிணக்கத்தைப் பராமரிப்பதில் காவல் துறையின் பங்களிப்பு முக்கியம்.
இயற்கையைப் பாதுகாக்க மரம் நடுதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் ஆகியவற்றில் காவல் துறையினர், பிற துறையினருடன் இணைந்து செயல்பட வேண்டும். தமிழக காவல் துறையினர் அனைவரையும் ஈர்க்கும்வகையில் பணியாற்றி வருவதற்காக டிஜிபிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.
வெயிலில் மயங்கிய காவலர்கள்
சென்னையில் நேற்று வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருந்தது. அணிவகுப்பை தலைமையேற்று நடத்திய பரங்கிமலை கூடுதல் ஆணையர் பிரதீப், குடியரசுதுணைத் தலைவர் பேசும்போது மயங்கி விழுந்தார். அவரை உயர்அதிகாரிகள் அதற்குமேல் அணிவகுப்பில் பங்கேற்க அனுமதிக்கவில்லை.
அவருக்குப் பதில் டிஎஸ்பி பிரீத்தி அணிவகுப்பை நடத்தினார். மேலும், அணிவகுப்பை நிறைவு செய்வதற்கான உத்தரவைப் பெற பிரதீப்புக்கு பதில் டிஎஸ்பி ஜனனி பிரியா வந்தார். மேலும், சில காவலர்களும் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்தனர்.