மதுரை: மதுரை மண்டலத்திலுள்ள மதுரை மண்டலத்திலுள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 29 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலுள்ள 14,430 இடங்களுக்கு 73,260 பேர் போட்டி ஓரிரு நாளில் சேர்க்கை கலந்தாய்வு தொடங்குகிறது.
சமீப ஆண்டுகளாக பொறியியல் போன்ற படிப்புக்கு ஆர்வம் குறைந்து, கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுவதால் ஒவ்வொரு ஆண்டும், இக்கல்லூரி களுக்கு கூடுதல் விண்ணப்பங்கள் வருகின்றன. குறிப்பாக குறைந்த கட்டணத்தை கருத்தில்கொண்டு அரசு, அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் (காலை சுழற்சி வகுப்புகள்) சேர கூடுதல் விருப்பம் காட்டுகின்றனர்.
கலை பிரிவுவில் ஒரு வகுப்பிற்கு 60 மாணவர்கள் என்றும், அறிவியல் பிரிவு பாடங்களுக்கு 40 மாணவ, மாணவர்கள் என்ற விகிதாசாரத்திலும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனாலும், ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் கூடுதலாக 3 அல்லது 4 மடங்கு பேர் விண்ணப்பிக்கின்றனர் என கல்லூரி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.
மதுரை மண்டலத்திலுள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 29 அரசு, கலை அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. 2022-23ம் கல்வியாண்டிற்கு பல்வேறு இளநிலை பாடப்பிரிவுகளுக்கு சுமார் 73,260 மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இருப்பினும், அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்கள் 14,430 பேர் மட்டுமே. 5 மடங்கிற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருப்பது தெரிகிறது.
மேலும், மதுரை மாவட்டத்திலுள்ள 3 அரசு கலைக் கல்லூரிகளில் மட்டும் பல்வேறு பாடப்பிரிவுகளில் சேர இம்முறை 22,779 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அரசு ஒதுக்கீட்டின்படி 2,448 மாணவ, மாணவியர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பொறியியல் போன்ற படிப்புக்கு ஆர்வம் குறைந்தால் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அக்கறை காட்டுவதாக கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவிக்கிறது.
மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் பொன். முத்துராமலிங்கம் கூறுகையில், ”ஒவ்வொரு ஆண்டு அரசு கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அரசு கல்லூரிகளில் முதல், மதியம் சுழற்சி வகுப்புகளில் சேரும் மாணவ, மாணவர்களுக்கு ஒரே கல்விக்கட்டணம் என்பதாலும், ஏழை மாணவர்கள் அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர்.
இவ்வாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு அரசு கல்லூரிகள் தயாராகிவிட்டன. தரவரிசை பட்டியலை கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ள போதிலும், இன்னும் ஓரிரு நாளில் கலந்தாய்வு நடக்கும். பிளஸ்-2 சிபிஎஸ்இ தேர்வு முடிவு தாமதத்தால் இம்முறை ஒருவாரம் தாமதமாகிவிட்டது என்றாலும், முறையாக கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்” என்றார்.