சென்னை: மருத்துவமனைக்கு வராமல் வருகைப் பதிவு செய்த கோவை அரசு மருத்துவமனை இதயவியல் துறை தலைவர் முனுசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் இதய நோய் சிறப்பு நிபுணர் முனுசாமி தினமும் மருத்துவமனைக்கு வருகை தராமலேயே, வருகை பதிவேட்டில் வந்ததாக பதிவு செய்யப்பட்டு வந்தது.
இது குறித்து புகார் வந்ததையடுத்து, நேற்று குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். துறை ரீதியிலான விசாரணைக்கு உட்படுத்தி மேலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மருத்துவர்கள் கடவுள் போன்றவர்கள் இவர்களை நம்பியே மக்கள் மருத்துவமனைக்கு வருகின்றனர். எனவே மருத்துவர்கள் இதுபோன்று இருக்கக் கூடாது. தவறு செய்பவர்களுக்கு ஒருபோம் துணை போக மாட்டேன். உன்மையாக இருப்பவர்களுக்கு சாதாரண ஊழியனாக இருந்து துணை நிற்பேன்” என்று அமைச்சர் தெரிவித்தார்.