ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஆறு வயதுச் சிறுமி, விலைவாசி உயர்வால் தான் சந்திக்கும் கஷ்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கன்னௌஜ் மாவட்டத்தில் உள்ள சிப்ரமாவ் நகரைச் சேர்ந்த கிரித்தி துபே (Kriti Dubey) என்ற சிறுமி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், “என் பெயர் கிரித்தி துபே. நான் 1ஆம் வகுப்பு படிக்கிறேன்.மோடிஜி நீங்கள் மிகப்பெரிய விலைவாசி உயர்வுக்குக் காரணமாயிருக்கிங்க. என்னுடைய பென்சில் மற்றும் ரப்பரின் விலைகூட அதிகமாயிருக்கு. இதுமட்டுமல்லாமல் மேகியின் விலையும் கூடிருச்சு. என் அம்மா பென்சில் கேட்டா என்னை அடிக்குறாங்க. நா என்ன பண்ண முடியும். மற்ற குழந்தைகள் என்னுடைய பென்சிலைத் திருடுறாங்க” என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறார்.
அந்தச் சிறுமியின் தந்தை வழக்கறிஞரான விஷால் துபே(Vishal Dubey) கூறும்போது, “இது என் மகளின் `மன் கி பாத்.’ சமீபத்தில் பள்ளியில் பென்சிலைத் தொலைத்தபோது அவங்க அம்மா திட்டியதால் கோபமடைந்திருக்கிறார்” என்றார். சிப்ரமாவ் மாவட்டத்தின் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் (SDM) அசோக் குமார் செய்தியாளர்களிடம், ”இந்தச் சிறுமியின் கடிதம் சமூக வலைதளங்கள் மூலம்தான் அறிந்தேன்.”குழந்தைக்கு எந்த வகையிலும் உதவ நான் தயாராக இருக்கிறேன், மேலும் அவளது கடிதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சென்றடைவதை உறுதிசெய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று கூறியிருக்கிறார். இந்தியில் அந்தச் சிறுமி எழுதிய கடிதம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.