Chennai Tamil News: சென்னை மிக முக்கியமான பன்னாட்டு விமான நிலையமாக திகழ்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் பணியாற்றி வருவதால் இந்த விமான நிலையத்தை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக இங்கிலாந்தில் கல்வி, தொழில் நிமித்தமாக தமிழர்கள் அதிகம் உள்ளனர். எனவே சென்னையில் இருந்து லண்டன் செல்லும் நேரடி விமானத்திற்கு எப்போதும் டிமாண்ட் அதிகம்.
தினசரி சென்னையில் இருந்து லண்டனுக்கு இயக்கப்பட்ட விமானங்கள், பெருந்தொற்று காலத்தில் வாரத்திற்கு மூன்று நாட்களாக குறைக்கப்பட்டன. இதனால், டிக்கெட்டுகள் பலநாட்களுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டன.
தற்போது பெருந்தொற்று நெருக்கடிகள் குறைந்து விட்டதால் மீண்டும் சென்னைக்கு பழையபடி விமானங்களை இயக்க பிரிட்டிஷ் ஏர்வேஸ் முடிவு செய்திருக்கிறது. மேலும், மக்களின் தேவைகள் அதிகரித்ததனால் அவர்களின் கோரிக்கையை வைத்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் தற்போது தினசரி விமானங்களை இயக்குவதற்கு முடிவெடுத்துள்ளது.
ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து (இன்று முதல்) தினமும் லண்டன்-சென்னை விமானத்தை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் முடிவு செய்துள்ளது, அதற்கான ஆயத்த பணிகளும் நடந்து வருகிறது.
தினசரி இயங்கப்படும் விமானங்களின் நேரம்: அதிகாலை 3.30 மணிக்கு சென்னையில் தரை இறங்கும் விமானம், 5.31 மணிக்கு லண்டன் திரும்பும் என கூறப்படுகிறது.
இதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் மாநிலத்துக்கு வருவார்கள் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.