வன்முறையை எதிர்கொள்ள சகிப்புத்தன்மை தேவையில்லை; துப்பாக்கி எடுத்தால் துப்பாக்கியால் தான் பதில்!: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

கொச்சி: வன்முறையை எதிர்கொள்ள சகிப்புத்தன்மை தேவையில்லை; துப்பாக்கி எடுத்தால் துப்பாக்கியால் தான் பதில் அளிக்க வேண்டும் என்று கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘கடந்த 8 ஆண்டுகளாக எந்தவித ஆயுதம் ஏந்திய குழுக்களுடனும் நாம் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. சரணடைய முன்வருபவர்கள் மட்டுமே வரவேற்கப்படுகின்றனர்.ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தல், வடகிழக்கு மாநிலங்களில் இனவாத குழுக்களின் மோதல்கள், மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் ஆகியன கடந்த 8 ஆண்டுகளில் வெகுவாகக் குறைந்துள்ளன. மும்பை தீவிரவாத தாக்குதலை நாம் மறக்க முடியாது. அந்த சம்பவத்தை அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கையாண்ட விதத்தையும் மறக்க முடியாது. அண்டை நாடுகள் நமக்கு நட்பு நாடுகளா அல்லது எதிரி நாடுகளா என்பதை தெளிவாக உறுதி செய்ய வேண்டும். வெறும் 10 தீவிரவாதிகள் நாட்டையே மிரள வைத்தனர். அந்தத் தாக்குதல் நடந்து 9 மாதங்களில் அப்போதைய பிரதமரும் பாகிஸ்தான் பிரதமரும் கூட்டு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டனர். அதில் இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளுமே தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவை என்று கூறப்பட்டிருந்தது. இதை எப்படி ஏற்க முடியும். பாகிஸ்தான் நமக்கு நண்பரா, எதிரியா என்பதை தீர்மானித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா?. புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா பாலாகோட்டில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. எதிரிகள் தீவிரவாத தாக்குதல் நடத்தினால் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும் என்ற செய்தியை அந்தத் தாக்குதல் மூலம் தெரிவிக்கப்பட்டது. அப்படித்தானே ஒரு அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டும். துப்பாக்கியை பயன்படுத்துபவர்களை துப்பாக்கி கொண்டுதான் கையாள வேண்டும்.  வன்முறையை எதிர்கொள்வதில் துளியும் சகிப்புத்தன்மை தேவையில்லை. தேசத்தின்  ஒற்றுமை, ஒருமைப்பாடுக்கு எதிராக பேசுபவர்களுடன் பேச்சுவார்த்தை  அவசியமில்லை’ என்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஏற்கனவே ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். அதன் பின்னர் மேகாலயா மாநில ஆளுநராகவும் இருந்திருக்கிறார். இவர் மேகலயாவில் என்எஸ்சிஎன் ஐசக் முய்வா குழுக்கள் இடையேயான மோதல்களைத் தீர்க்க அரசு சார்பில் பலகட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.