புதுடெல்லி: இந்திய விமானத் துறை முற்றிலும் பாதுகாப்பாகவே உள்ளது என்றும் பயப்படத் தேவையில்லை என்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் தலைவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
சமீபமாக, இந்திய விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதி வழியிலே தரையிறக்கப்படும் நிகழ்வு தொடர்ச்சியாகியுள்ளது. இது விமானப் பயணங்களின் பாதுகாப்பு குறித்து மக்களிடையே கூடுதல் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய விமானத் துறை பாதுகாப்பாக உள்ளது என்றும் அனைத்து பாதுகாப்பு விதிகளும் முறையாக பின்பற்றப்படுவதாகவும் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் தலைவர் அருண் குமார் தெரிவித்தார்.
மேலும், அவர் ‘தற்போது ஏற்பட்டிருக்கும் பிரிச்சினைகள் வழக்கமாக ஏற்படக்கூடியவைதான். இந்திய விமான நிறுவனங்கள் என்றில்லை, கடந்த 16 நாட்களில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு விமானங்களும் 15 தடவை தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்கொண்டன. அந்தப் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட்டன’ என்று தெரிவித்தார். 2021 ஜூலை முதல் 2022 ஜூன் வரையில் இந்திய விமானங்களில் 478 தடவை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக கடந்த வாரம் மத்திய விமானத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மக்களவையில் தெரிவித்தார்.
விமானப் பயணங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்பொருட்டு விமானப் பாதுகாப்பு அமைப்பு, பராமரிப்பு அமைப்பு, பணியமர்த்தப் பட்டிருக்கும் பொறியாளர்களின் திறன் உள்ளிட்டவற்றை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சிறப்பு ஆய்வு செய்துவருகிறது. இந்த சிறப்பு ஆய்வு இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.