புதுடெல்லி: வெளிநாட்டு நிதி தொடர்பான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் 10 சதவீத கமிஷன் கேட்டதை செல்போன்களை ஒட்டு கேட்டு சிபிஐ பிடித்துள்ளது. தன்னார்வ தொண்டு அமைப்புகள் (என்ஜிஓ) வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுகின்றன. இந்த பணம் தீவிரவாத செயல்களுக்கும் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், இந்த நன்கொடையை கட்டுப்படுத்துவதற்காக வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை சட்டத்தை (எப்சிஆர்ஏ) ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இதில், தொண்டு அமைப்புகள், தனிநபர்கள் இந்த நிதியை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறி வரும் வெளிநாட்டு நிதி நிறுத்தி வைக்கப்படும். அப்போது, தொண்டு அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த நிதியை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். இதற்கான கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு உள்துறை அதிகாரிகள் 5 முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் கேட்டுள்ளனர். ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் இடைத்தரகர்கள் சிலர் கைகோர்த்து, இந்த சதியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறப்பித்த உத்தரவின்படி, 437 பேரின் செல்போன் அழைப்புகளை சிபிஐ ஒட்டு கேட்டது. இதில், அதிகாரிகள் வசமாக சிக்கியுள்ளனர். அவர்களின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.