5ஜி அலைக்கற்றை ஏலம் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு விடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக நீடித்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஜியோ தொலை தொடர்பு நிறுவனம் முன்னணியில் உள்ளது.
அதிரடியான துவக்கம்; ஆனால் அடுத்தடுத்து மந்தம்!
தங்கு தடையின்றி அதிவேகத்தில் இணைய தொடர்புகளை மேற்கொள்வதற்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த வாரம் தொடங்கியது. முதல் நாள் அன்றே ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் ஏலம் மந்த நிலையாக சென்றது. இதனால், ஒவ்வொரு நாளும் ஏலத்தை மத்திய அரசு நீட்டித்து வந்தது.
முந்தைய ஏலத்தொகையை விட அதிகம்:
இந்நிலையில், மொத்தமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய்க்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடுக்கப்பட்டிருப்பதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது 2010 ஆம் ஆண்டு 3ஜி அலைக்கற்றை ஏலத் தொகையை விட மூன்று மடங்கு அதிகம். 77 ஆயிரத்து 815 கோடிக்கு ஏலம் விடப்பட்ட 4ஜி அலைக்கற்றையை இரு மடங்கு அதிகம்.
அதிக அலைக்கற்றைகளை வாங்கிக் குவித்த ஜியோ:
4ஜியை விட 10 மடங்கு வேகத் திறன் கொண்ட 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமே முன்னணியில் உள்ளது. மொத்தமாக 57,122 கோடி ரூபாய்க்கு ஜியோ ஏலம் எடுத்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பார்தி ஏர்டெல் நிறுவனம் 18,699 கோடி ரூபாய்க்கும், வோடாஃபோன் ஐடியா நிறுவனம் 1,993 கோடி ரூபாய்க்கும் 5 ஜி அலைக்கற்றையை ஏலம் மூலம் வாங்கியுள்ளன.
எதிர்பார்த்தது 4.3 லட்சம் கோடி! கிடைத்ததோ 1.5 லட்சம் கோடிதான்!
இந்த ஆண்டு மொத்தமாக 72 ஜிகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகள் சுமார் 4.3 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1.5 லட்சம் கோடிக்கு மட்டுமே ஏலம் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM