இந்தியாவில் ஐந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாணராமனின் மோசடியை நான்காவது மனைவி அம்பலப்படுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் ஐந்து பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக, நான்காவது மனைவி பொலிசில் புகார் செய்ய வந்தது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் உள்ள பதிவில், நான், கடலுார் மாவட்டம் மேலக்குப்பத்தை சேர்ந்த காயத்ரி. எனக்கும், அரியாங்குப்பத்தை சேர்ந்த சீனு (எ) தெய்வநாயகம் (42) என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2020, ஜூலை மாதம் புதுச்சேரி பிருந்தாவனம், பிள்ளையார் கோவிலில் திருமணம் நடந்தது.
எனக்கு சீர் வரிசையாக 6 சவரன் நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை எனது பெற்றோர் வழங்கினர்.இருவரும் மூன்று மாதம் ஒன்றாக வாழ்ந்தோம். அதில் நான் கர்ப்பமடைந்தேன். அதன்பிறகு எனது கணவர் வரதட்சணையாக பணம், நகை கேட்டு துன்புறுத்தினார்.அதனை அறிந்த எனது தாய், என்னை வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார்.
அதன்பிறகு, எனது கணவர் என்னிடம் பேசவில்லை. அதுகுறித்து கேட்டபோது, நீ என் மனைவியே இல்லை என்றார்.வெளியில் விசாரித்தபோது, அவருக்கு ஏற்கனவே மூன்று மனைவிகள் இருப்பதும், அதனை மறைத்து என்னை நான்காவதாக திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.
நான் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, எனது கணவர் 5வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து கேட்டால், ஆட்களை அனுப்பி, என்னையும், எனது தாயாரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகிறார்.
தற்போது, பெண் குழந்தையை வைத்துக்கொண்டு சிரமப்படுகிறேன். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதுச்சேரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4-வது மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்ததன் மூலம் இவரின் திருமண லீலைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.