பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குப் புத்துயிரூட்ட ஒரு இலட்சத்து 64ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவது அதன் சேவைத் தரத்தை உயர்த்தவும், கடன் சுமையைக் குறைக்கவும், கண்ணாடி இழை வலையமைப்பை விரிவாக்கவும் உதவும் எனத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பிஎஸ்என்எல்லின் வருவாயில் 80 விழுக்காடு ஊதியத்துக்கும் ஓய்வூதியத்துக்கும் செலவிடப்பட்டு வந்த நிலையில் 2019ஆம் ஆண்டு ஊழியர்களின் விருப்ப ஓய்வுத் திட்டத்துக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
இதனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதன் நட்டம் பாதியாகக் குறைந்தது. 4ஜி சேவை அறிமுகம், அடிப்படைச் சேவைகளின் மேம்பாடு உள்ளிட்ட புத்துயிரூட்டல் பணி நிறைவடையும்போது பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்பாட்டு இலாபம் ஈட்டும் நிலைக்குத் திரும்பி விடும் என்றும், 2026 – 2027 நிதியாண்டில் இருந்து இலாபம் கிடைக்கும் என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.