Doctor Vikatan: குழந்தைக்கு கட்டாயப்படுத்தி சாப்பாடு ஊட்டலாமா… பசியில் அழும்வரை காத்திருக்கலாமா?

குழந்தை பசியோடு உள்ளதா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? தாய்ப்பாலோடு திட உணவையும் கொடுக்கும்போது, சிலநேரம் திட உணவை சாப்பிட மறுக்கிறது. குழந்தை பசியோடு உள்ளதா இல்லையா என்று கண்டுபிடிக்க முடிவதில்லை. குழந்தை கேட்கட்டும் என உணவு கொடுக்காமல் காத்திருக்க வேண்டுமா அல்லது கட்டாயப்படுத்தி அதற்கு நேரத்துக்கு சாப்பாடு ஊட்ட வேண்டுமா?

ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்…

பச்சிளம் குழந்தைகளால் மிகக் குறைந்த அளவுதான் உணவு எடுத்துக் கொள்ள முடியும். தாய்ப்பால் கொடுத்த உடனே, குழந்தைக்கு திட உணவு கொடுத்தால் அதனால் சாப்பிட முடியாது. எனவே உணவு இடைவேளை மிகவும் முக்கியம். தாய்ப்பால் கொடுக்கும் நேரத்துக்கும், திட உணவு கொடுக்கும் நேரத்துக்கும் இடைவெளி தேவை.

அதாவது, காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு நேரத்தில் திட உணவுகளைக் கொடுக்கலாம். இடைப்பட்ட நேரத்தில், அதாவது, காலையில், முற்பகலில், மாலையில், இரவு தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் கொடுக்கலாம்.

Babies

பசியானாலும் சரி, வயிறு நிறைந்துவிட்டாலும் சரி, குழந்தைகள் சில சமிக்ஞைகள், சத்தங்கள் மற்றும் அசைவுகளின் மூலம் உணர்த்தும். சாப்பாட்டை அருகில் கொண்டு போகும்போது வாயைத் திறக்கும்.

உணவின் மணம் உணர்ந்தாலே ஆர்வமாகும். சில சத்தங்களை எழுப்பி, கை அசைவுகளைக் காட்டி, தனக்கு இன்னும் பசிக்கிறது என்பதை உணர்த்தும். உணவு இருக்கும் இடத்தை நோக்கி நகரும் அல்லது கையைக் காட்டும்.

வயிறு நிறைந்துவிட்ட நிலையில், குழந்தை உணவை ஏற்காமல், தள்ளிவிடும். உணவு கொடுக்கும்போது வாயைத் திறக்காமல் அடம்பிடிக்கும். உணவு இருக்கும் திசையிலிருந்து விலகி, தலையை வேறு பக்கம் திருப்பிக்கொள்ளும். அசைவுகள் மற்றும் சத்தங்களின் மூலம் தனக்கு வயிறு நிறைந்துவிட்டதை உணர்த்தும்.

feeding

திட உணவுகளைக் கொடுக்கத் தொடங்கும்போது குழந்தை, புதிய சுவைகளுக்குப் பழகுகிறது. அந்த நேரத்தில் கட்டாயப்படுத்தி உணவை ஊட்டுவதைத் தவிருங்கள். அப்படி வற்புறுத்தி ஊட்ட ஆரம்பித்தால் குழந்தைக்கு அந்த உணவின் மீது வெறுப்பு ஏற்படலாம்.

தனக்கு எவ்வளவு சாப்பாடு வேண்டும் என்பதை குழந்தையே தீர்மானிக்கட்டும். நீங்கள் கொண்டு வந்த உணவு முழுவதையும் குழந்தை சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்காதீர்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.