அமெரிக்காவின் ஏவுகணையால் அல்-ஜவாஹிரிக்கு நடந்த கொடூர மரணம் …! அடுத்த தலைவர் யார்…?

வாஷிங்டன்

டிரோன் தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் அல்-ஜவாஹிரியை அமெரிக்கா கொன்றது. ஜவாஹிரியின் மரணத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதிப்படுத்தி உள்ளார். ஜவாஹிரி அமெரிக்க இரட்டைகோபுர தாக்குதல் சதியில் ஈடுபட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்.இந்த தாக்குதலில் 2,977 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு தற்போது நீதி கிடைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.அல் ஜவாஹிரிக்கு தலைக்கு அமெரிக்க ரூ.1.97 கோடி பரிசு அறிவித்து இருந்தது.

அல் ஜவாஹிரி (71) ஓசாமா பின்லேடன் இறந்ததில் இருந்து அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்து வந்தார்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஜவாஹிரி பதுங்கியிருந்தார். சி.ஐ.ஏ உளவாளிகள் இதைக் கண்டுபிடித்தனர். அல்-கொய்தா பயங்கரவாதிகளின் கடும் பாதுகாப்பு அரணுடன் கோட்டை போல இந்த வீடு இருந்தது. காபூலின் புறநகரான ஷெர்பூர் பகுதியில் இருக்கும் இந்த வீட்டை நீண்ட காலமாக சாட்டிலைட் மற்றும் டிரோன்கள் மூலம் சி.ஐ.ஏ கண்காணித்து வந்தது. ஜவாஹிரியின் குடும்பமும் அவருடன் இருந்தது. ஏற்கெனவே 11 ஆண்டுகளுக்கு முன்பு பின் லேடனை பாகிஸ்தானில் குறிவைத்து அமெரிக்கா கொன்றபோது, அவர் குடும்பத்தினர் பலரும் தாக்குதலில் இறந்தனர். இம்முறை ஜவாஹிரியை மட்டும் கொல்ல முடிவெடுத்தது சி.ஐ.ஏ.

அமெரிக்க டிரோன், இரண்டு ஹெல்பயர் ஏவுகணைகளை வீசி அவரைக் கொன்றது. இந்த ஏவுகணை ஒரு வித்தியாசமான ஆயுதம். இலக்கைத் தாக்கும்போது இது வெடிக்காது. அதனால் குண்டுவெடிப்பு சத்தம் கேட்காது. அந்த இடத்தில் பேரழிவையும் இது ஏற்படுத்தாது. ‘நிஞ்சா பாம்’ என்று அழைக்கப்படும் இது உண்மையில் வெடிக்கும் ஏவுகணை இல்லை.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் மரியாதைக்குரிய குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஜவாஹிரி. அவரின் தாத்தா, சன்னி முஸ்லிம்களால் பெரிதும் மதிக்கப்பட்ட இஸ்லாமிய அறிஞர். அவரின் மாமா, அரபு நாடுகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக இருந்தவர். அவரின் தந்தை, கெய்ரோ மருத்துவக் கல்லூரி பேராசிரியர். தன் மகனையும் டாக்டர் ஆக்கிப் பார்க்க ஆசைப்பட்டார்.

ஜவாஹிரி அதேபோல கண் மருத்துவம் படித்து, கெய்ரோ புறநகரில் கிளினிக் வைத்தார். ஆனால், பள்ளி வயதிலிருந்து தபயங்கரவாத எண்ணம் அவரை ஆக்கிரமித்தது. எகிப்தில் தலைமறைவாக இயங்கிய ‘முஸ்லிம் பிரதர்ஹுட்’ அமைப்பில் 15 வயதிலேயே இணைந்தார். மருத்துவம் படிக்கும்போதே எகிப்து இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பில் சேர்ந்தார். எகிப்து அதிபராக இருந்த அன்வர் சதாத் இந்த அமைப்பால் கொல்லப்பட்டபோது, ஜவாஹிரி கைது செய்யப்பட்டார். அப்போது சிறையில் அனுபவித்த சித்திரவதைகள் அவரை இன்னும் உறுதியான பயங்கரவாதியாக மாற்றின.

விடுதலை கிடைத்ததும் சவூதி அரேபியா சென்ற ஜவாஹிரி, அதன்பின் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் தலைமறைவாக வாழ்ந்து, எகிப்து இஸ்லாமிக் ஜிகாத் அமைப்புக்கு ஆதரவு திரட்டினார். ஒரு மருத்துவராக சிகிச்சை அளித்தபடி இதைச் செய்ததால், பல இளைஞர்கள் அவரை நம்பி வந்தார்கள். அவரது அமைப்பு தொடர்ச்சியாக எகிப்தில் தாக்குதல் நடத்தி பல அமைச்சர்களையும் அதிகாரிகளையும் கொன்றபடி இருந்தது. ஜிகாத் தாக்குதல்களுக்கு நிதி திரட்டுவதற்காக போலி பாஸ்போர்ட்டில் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தார்.

ரஷியாவில் ஒருமுறை அவரைக் கைது செய்தார்கள். ஆனால், அவரின் கம்ப்யூட்டரில் இருந்த அரபு டாக்குமென்ட்களை ரஹிய அதிகாரிகளுக்கு படிக்கத் தெரியவில்லை. அதனால் அவரின் அடையாளம் புரியாமல் விடுதலை செய்துவிட்டார்கள். ரஷ்யாவிலிருந்து விடுதலை ஆனதும் ஆப்கானிஸ்தான் வந்தார் ஜவாஹிரி. அவர் பின் லேடனை சந்தித்தபிறகு அல்-கொய்தா வலுவடைந்தது.

ஜவாஹிரிக்குப் பிறகு வேறொரு தலைவர் அந்த அமைப்புக்கு வரலாம். ஆனால், அவரை முதல் நாளிலிருந்தே அமெரிக்க டிரோன்கள் வட்டமிட்டுக் கொண்டிருக்கும் என்பதுதான் உண்மை.

ஜவாஹிரி மரணத்திற்கு பிறகு எகிப்தின் முன்னாள் ராணுவ அதிகாரியான சைப் அல்-அடெல், அல்கொய்தாவின் அமைப்புக்கு அடுத்த தலைவராக தேர்ந்து எடுக்கபடலாம் என கூறப்படுகிறது.

எகிப்திய இஸ்லாமிய ஜிகாதில் சேருவதற்கு முன்பு அல்-அடெல் பின்லேடன் மற்றும் அல்-ஜவாஹிரியை பயங்கரவாதக் குழுவான மக்தாப் அல்-கிதாமத்தில் சந்தித்தார்.அல்-அடெலின் உண்மையான பெயர் முகமது சலா அல்-தின் ஜைடன்.

அல்-அடெல் சோமாலியாவின் மொகடிஷுவில் ‘பிளாக் ஹாக் டான்’ நடவடிக்கையை மேற்பார்வையிட்டார், அவருக்கு 30 வயதாக இருந்தபோது, அங்கு 19 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர், அவர்களின் உடல்கள் தெருவில் இழுத்துச் செல்லப்பட்டன.

அல்-கொய்தா ஆப்கானிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படுகிறது. அல்-அடெல் பயங்கரவாதக் குழுவின் தலைமையை=பிடிப்பதைத் தடுக்கக்கூடிய ஒரே முக்கிய அம்சம் என்னவென்றால், அவர் கடந்த 19 ஆண்டுகளாக ஈரானில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அல்-ஜவாஹிரியின் மரணத்திற்குப் பிறகு உயிருடன் இருக்கும் ஒரே அல்-கொய்தா தலைவர் அல்-அடெல் மட்டுமே.

இவர் ஏற்கனவே அமெரிக்காவின் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கபட்டு உள்ளார். ‘ஆகஸ்ட் 7, 1998, டார் எஸ் சலாம், தான்சானியா மற்றும் கென்யாவின் நைரோபியில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீதான குண்டுவெடிப்பு தொடர்பாக அவர் தேடப்பட்டு வருகிறார். இந்த தாக்குதலில்12 அமெரிக்கர்கள் உட்பட 224 பேர் இறந்தனர், மேலும் 4,500 பேர் காயமடைந்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.