காபூல்: அல்-காய்தா அமைப்பின் தலைவர் அய்மான் அல்- ஜவாஹிரி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அல்-காய்தா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின்லேடன் 2011ல் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார். அதன்பின் அல்-காய்தா அமைப்பை வழிநடத்தி வந்தார் அல்- ஜவாஹிரி. இவர் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். சில நேரங்களில் குறிப்பாக, இந்திய விவகாரங்களில் வீடியோக்களில் தோன்றி பேசிவந்தார்.
அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவர், நேற்றிரவு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அவர் கொல்லப்பட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. காபூலில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் அல்- ஜவாஹிரி கொலை செய்யப்பட்டார் என்பதை அமெரிக்க அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேபோல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்த தகவலை உறுதிப்படுத்தியோடு, இதை “வெற்றிகரமான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை” என்றும் கூறியுள்ளார்.