“ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதியவர் சாவர்க்கர்” – தமிழிசைக்கு நாராயணசாமி காட்டமான பதில்

இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் 75 இடங்களில் தேசியக் கொடியுடன் கூடிய தியாகச் சுவர் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. அந்த தியாகச் சுவரில் சுதந்திரப் போராட்டத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் பெயர் பலகைகளை பதிக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுவரும் தியாக சுவரில், சாவர்க்கர் பெயர் இடம்பெற்ற பலகையை பதித்தார் பொறுப்பு ஆளுநர் தமிழிசை. அதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “ராகுல் காந்தி நாடு முழுவதும் பாதயாத்திரை செல்வதற்கான ஏற்பாடுகளை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்து வருகிறது. வருகிற 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவாக நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஊர்வலம் நடக்கிறது. புதுவையில் மோடி அரசின் மக்கள் விரோத செயல்கள், விலைவாசி உயர்வு, ஆட்சி கவிழ்ப்பு, மதக் கலவரம் ஆகியவற்றை எடுத்துச்செல்லும் விதமாக அந்த பாதயாத்திரை இருக்கும். தமிழக முதல அமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் மத்திய மோடி அரசை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

நாராயணசாமி

மத்திய பா.ஜ.க அரசு இரட்டை ஆட்சி முறையை கொண்டுவந்து ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படுகிறது என கூறியுள்ளார். அதை நான் முழுமையாக வரவேற்கிறேன். புதுவையில் எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, ஆளுநர் மூலமாக ஆட்சியை முடக்கினர். அதனால் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் ஸ்டாலினின் கருத்தை வரவேற்கிறேன். மாநிலங்களில் அடிமை ஆட்சி நடக்க வேண்டும் என பா.ஜ.க விரும்புகிறது. ஆனால் அது நீண்டகாலம் நீடிக்காது. விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். புதுச்சேரியில் அமைக்கப்படும் தியாக சுவரில் சாவர்க்கர் பெயரை வைத்திருக்கிறார் ஆளுநர் தமிழிசை. அத்துடன் சாவர்க்கர் இந்தியாவின் தியாகி என்றும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அவரின் பெயரை பதிப்பதில் என்ன தவறு என்றும் கேட்டிருக்கிறார். மேலும் தனக்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்ள தயார் என்றும் கூறியுள்ளார் ஆளுநர் தமிழிசை. தமிழிசை சுதந்திர போராட்ட தியாகியின் குடும்பத்தை சேர்ந்தவர்.

ஏதோ தப்பித்தவறி பா.ஜ.கவில் உறுப்பினராகி தமிழிசை ஆளுநராகியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தோற்றுவித்தவர்தான் சாவர்க்கர். அவரை சுதந்திர போராட்ட தியாகியாக ஏற்க முடியாது. அந்தமான் சிறையில் இருந்தபோது, சிறையிலிருந்து விடுதலையாவதற்காக ஆங்கிலேயர்களுக்கு 7 மன்னிப்பு கடிதங்களை எழுதினார். அவற்றில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு விசுவாசமாக இருப்பேன் என குறிப்பிட்டிருந்தார். அதன் காரணமாகத்தான் ஆங்கிலேயர்கள் நிபந்தனையுடன் அவரை விடுவித்தனர். எனவே அவர் சுதந்திர போராட்ட தியாகி அல்ல. சாவர்க்கரின் சுயசரிதையை ஆளுநர் தமிழிசை படிக்க வேண்டும். சரித்திரத்தை மாற்ற நினைக்கிறது பா.ஜ.க. மக்கள் அதனை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.

ரங்கசாமி தலைமையிலான அடிமை ஆட்சி விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட்டில் எவ்வளவு நிதி பற்றாக்குறை உள்ளது என தெரியும். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. ஆனால் தினந்தோறும் கொலைகள் நடக்கிறது. கொலை நகரமாக புதுவை மாறியுள்ளது. புதுவை மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதேநிலை நீடித்தால் சுற்றுலா பயணிகள் வருகை கேள்விக்குறியாகிவிடும். பொருளாதாரம் வீழ்ச்சியடையும். ரங்கசாமியின் அவல ஆட்சிக்கு மக்கள் தகுந்த நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்” என்றவரிடம், காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் நிலவுகிறதே ? என்று நிருபவர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”அது எங்கள் உள்கட்சி விவகாரம். அதை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம்” என்று முடித்துக்கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.