சென்னை: ஆவின் பால் பாக்கெட்டில் அளவைகுறைத்து மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆவின் நிறுவனத்தில், மக்களுக்கு வழங்கப்படும் அரை லிட்டர்பாக்கெட் பாலில் சுமார் 70 மி.லி அளவை குறைத்து 430 மி.லி மட்டுமே வழங்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு பாக்கெட்டுக்கு 70 மி.லி குறைகிறது என்றால், ஒரு பாக்கெட்டுக்கு ரூ.3.08 குறைய வேண்டும்.இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.2.16 கோடிக்கு மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்த பணம் யாருக்கு போய் சேர்ந்தது? வழக்கம்போல அதிகாரிகள் மீது பழி சுமத்தி முதல்வரும், அமைச்சரும் தப்ப முடியாது. இயந்திர கோளாறு ஏற்பட்டு, அதைஅறியாமல் நடந்த தவறு என்று வைத்துக்கொண்டாலும், தினமும் 5 லட்சம் லிட்டர் பால் மிச்சமாகி இருக்கும். இந்த அதிகப்படியான பால் எங்கே போனது?
எத்தனை நாட்கள் மக்கள் இதுபோல ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றுமுழு நீதி விசாரணை நடத்தவேண்டும். அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான பணத்தை மக்களுக்கு ஆவின்திருப்பி தர வேண்டும்.