இதுவரை நாம் அழியாமல் இருப்பது அசாதாரண அதிர்ஷ்டத்தால்தான் என்கிறார் ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைவர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலரான அன்டோரியோ குட்டெரஸ், உலகம் அணு ஆயுதப்போரால் அழிவதற்கு ஒரு தவறான புரிதல் அல்லது தவறான கணிப்பு போதும் என்று கூறியுள்ளார்.
அப்படி நாம் இதுவரை அழியாமல் தப்பியது அதிர்ஷ்டம்தான் என்று கூறும் குட்டெரஸ், ஆனால், அதிர்ஷ்டம் மட்டுமே போதாது, மொத்த அணு ஆயுதங்களும் உலகிலிருந்து அகற்றப்பட்டால்தான் முழுமையான பாதுகாப்பு என்கிறார்.
அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்கான மாநாடு ஒன்றைத் துவக்கி வைத்துப் பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஏற்கனவே ஒரு முறை, கிட்டத்தட்ட அணு ஆயுதப் போர் துவங்கும் ஒரு நிலைமை உலகில் உருவானது என்பது உங்களுக்குத் தெரியுமா?
1960களில், சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பனிப்போர் உச்சத்தில் இருந்த நிலையில், அமெரிக்கா ரஷ்யாவைத் தாக்குவதற்கு தயாராக இத்தாலியிலும் துருக்கியிலும் தனது அணு ஆயுதங்களைக் கொண்டு வைத்திருந்தது. பதிலுக்கு ரஷ்யா தனது அணு ஆயுதங்களை கியூபா நாட்டில் கொண்டு வைப்பது என முடிவு செய்தது.
Image -REUTERS
கிட்டத்தட்ட பனிப்போர் முடிந்து ஒரு அணு ஆயுதப்போர் வெடிக்கும் நேரத்தில், அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி புத்திசாலித்தனமான ஒரு முடிவை எடுத்தார். அதன்படி அமெரிக்காவும் சோவியத் யூனியனும் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் தத்தம் அணு ஆயுதங்களைப் கலைப்பது என்ற முடிவுக்கு வந்தன. கியூபாவிலிருக்கும் தனது அணு ஆயுதங்களை சோவியத் யூனியன் திரும்பப்பெறவும் முடிவாயிற்று.
அதன் பின் அணு ஆயுதங்கள் பரவாமல் தடுப்பதற்காக 1968ஆம் ஆண்டு செய்யப்பட்டதுதான் இந்த அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம். பெரும்பாலான உலக நாடுகள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், இந்தியா, வடகொரியா, பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மட்டும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
தற்போது இந்த அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்கான மாநாடு ஒன்றைத் துவக்கி வைத்துப் பேசும்போதுதான், குட்டெரஸ் இதுவரை உலகம் அழியாமல் இருப்பது அசாதாரண அதிர்ஷ்டத்தால்தான் என்று கூறியுள்ளார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், மாநாட்டுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் அனுப்பியுள்ள செய்தியில், அணு ஆயுதப்போர்சிப் பொருத்தவரை, வெற்றி பெறுபவர் என ஒருவர் இருக்கவே முடியாது, எனவே அணு ஆயுதங்களை பயன்படுத்தவே கூடாது என்று கூறியுள்ளதுதான்.
காரணம், ரஷ்யாவின் இறையாண்மைக்கு ஆபத்து வரும் நிலையில், நாங்கள் அணு ஆயுதம் பயன்படுத்துவோம் என்று சமீபத்தில் உக்ரைன் போரின்போதுகூட கூறியவர் இதே புடின்தான்.
ஆக, குட்டரெஸ் கூறியது போல, இதுவரை உலகம் அழியாமல் இருப்பது அதிர்ஷ்டமாகவே இருந்தாலும், இந்த நாடு பிடிக்கும் ஆசையிலிருக்கும் தலைவர்கள் உணர்ச்சி வசப்பட்டு அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருந்தால்தான் உலகத்துக்கு அந்த அதிர்ஷ்டம் நீடிக்கும் என்பதையும் மறக்காமல் இருப்பது அனைவருக்கும் நல்லது.