புதுடெல்லி: மாலத்தீவுக்கு இந்தியா ரூ.790 கோடி கடன் உதவி வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலி 4 நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி வந்தார். பிரதமர் மோடியை சந்தித்த அவர் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே மாலத்தீவில் திறன் மேம்பாடு, சைபர் பாதுகாப்பு, வீட்டு வசதி, பேரிடர் மேலாண்மை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு என 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, மாலத்தீவு அதிபர் சோலி கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘‘இந்திய நிதி உதவியின் கீழ் மாலத்தீவு தலைநகர் மாலியில் ஏற்கனவே 4 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்பட்டு வரும் நிலையில், மேலும் 2 ஆயிரம் குடியிருப்புகளை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, மாலத்தீவின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக இந்தியா ரூ.790 கோடி கடன் உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் முடிவடையும். மாலத்தீவிற்கு எந்த பிரச்னை ஏற்பட்டாலும், உதவி தேவைப்பட்டாலும், முதல் ஆதரவுக்கரம் நீட்டும் நாடாக இந்தியா எப்போதும் இருக்கும்,’’ என்றார்.
