‛இரவின் நிழல்' படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்

பார்த்திபன் இயக்கம், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‛இரவின் நிழல்'. உலகின் முதல் லான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்ற பெருமையுடன் வெளியாகி உள்ளது. விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு பாராட்டு கிடைத்துள்ளது. இதனிடையே சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் இந்த படத்தை முதல்வர் ஸ்டாலின் பார்த்துள்ளார். அவருடன் பார்த்திபனும் உடன் இருந்தார்.

பார்த்திபனின் அசாத்தியமான சாதனை முயற்சியை வெகுவாகப் பாராட்டி, “இரவின் நிழல் திரைப்படம் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதெனில் அற்புதம்! என்று பாராட்டி , பார்த்திபனையும் படக்குழுவினரையும் வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வருக்கு தனக்கே உரிய வித்தியாசமான பாணியில் 'நேற்றைய அரசியல் வரலாறு – 2092″ எனும் முதல்வரின் சாதனைப் புத்தகத்தை வடிவமைத்து அவரிடம் வழங்கினார் பார்த்திபன்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவு : ‛‛எதிலும் தனிப்பாணி – அதுதான் பார்த்திபன். ஒத்தசெருப்பு-க்குப் பிறகு ஒத்த ஷாட் படம். இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம். நான் லீனியர் சிங்கிள் ஷாட் படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார்.

முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ள பார்த்திபன் : நான் லீனியர்-ல், நான் சீனியர் எனத் தமிழகமே பாராட்டிவிட்டது. முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி. பாராட்டப்படும் போது பட்டக் கடனும் படும் கஷ்டமும் தற்காலிகமாக தற்கொலை செய்துக் கொள்கின்றன. இனி பார்… பார்க்க …. பாராட்டும்'' என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.