அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெறலாமா? இதன் மீதான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு ஆகஸ்ட் 3-ம் தேதி தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.
இது தொடர்பாக, நிதிக்குழுவின் ஆலோசனைகளையும் பெறுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே, இலவசங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட, ‘சுப்ரமணியம் பாலாஜி எதிர் தமிழக அரசு’ வழக்கில், நீதி அரசர்கள் பி.சதாசிவம் மற்றும் ரஞ்சன் கோகாய் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு 2013, ஜுலை 5-ல் விரிவான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 14, 41, 162, 266(3), 282, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 123 உள்ளிட்டவை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதையடுத்து உச்ச நீதிமன்றம் கூறியதாவது:
1) தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தல் தவறான வழக்கம் ஆகாது.
2) இலவசத் திட்டங்கள், அரசமைப்புச் சட்டத்தின் பாகம் IV அரசின் கொள்கை வழிகாட்டு குறிப்புகள் கீழ் வருவதால் அவை பொது நோக்கு கொண்டவை ஆகும்.
3) எந்த ஒரு திட்டத்தின் செயல்பாடும் ஆய்வுக்கு உட்பட்டது. இதன் மீது நீதிமன்றத்தின் அதிகார வரம்பு அதிகமில்லை.
4) அரசின் செயல்பாடு, அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பாக இருந்தால் (மட்டுமே) நீதிமன்றம் தலையிடலாம்; மற்றபடி, அறிவார்ந்ததாக இல்லை, மக்கள் நலனுக்காக செலவு செய்யப்படவில்லை எனில் அதுகுறித்து சட்டமன்றங்களில் விவாதிக்கப்பட வேண்டுமே தவிர, நீதிமன்றங்களில் அல்ல.
சாசனப் பிரிவு 324-ன் படி, சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்துவது ஆணையத்தின் பணியாகும். இலவச அறிவிப்புகள் நியாயமான தேர்தலை பாதிக்கும் என்றால் தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து, தக்க நடத்தை விதிமுறைகள் கொண்டு வரலாம்.
இலவசத் திட்டங்களை கணக்குத் தணிக்கையாளர் தடுக்க முடியாது. அவரது பணி, அரசாங்கம் செலவு செய்த பிறகே தொடங்குகிறது; அதற்கு முன்பாக அல்ல.
இந்தப் பின்னணியில், சமுதாயத்தின் சமச்சீர் வளர்ச்சியில் இலவசங்களின் பங்கு; அரசுகளுக்கு இலவசங்களால் ஏற்படும் பொருளாதாரச் சுமை; அடித்தட்டு மக்களுக்கு இலவசங்கள் மூலம் கிடைக்கும் நிவாரணம்; இலவசங்களுக்கு எதிராகப் பொருளாதார அறிஞர்கள் முன்வைக்கும் வாதங்கள்… முக்கிய கவனம் பெறுகின்றன.
நிபுணர்களின் பார்வையில் இலவசங்கள் மிக நிச்சயமாய் ‘ஆரோக்கியமான செலவினம்’ அல்ல. உற்பத்தி சாரா செலவினங்களை இவர்கள் ஊக்குவிப்பது இல்லை. அதேசமயம் இவர்கள் அடித்தட்டு மக்களின் நல்வாழ்வுக்கு எதிரானவர்களும் இல்லை.
“உள்ளிருந்தே கொல்லும் நோயாக இலவசங்கள் ஏற்படுத்தும் நிதிச்சுமை, ஒரு நாட்டின் அல்லது ஒரு மாநிலத்தின் பொருளாதாரத்தை சீரழித்து விடலாம். எனவே இலவசங்கள் கூடாது” என்கின்றனர். ஆனால் அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் ‘மக்கள் நல அரசு’ (Welfare State) இயல்பாகவே மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்தத்தான் வேண்டும். இல்லாதவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் வரை, இலவசங்களுக்கான தேவையும் இருக்கத் தான் செய்யும்.
சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் சமமின்மை காரணமாக சமுதாயப் பதற்றம் ஏற்படாமல் தடுப்பதிலும் இலவசங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஏராளமானோர் வாழ்வின் விளிம்பில் தத்தளிக்கும்போது, அவர்களுக்கான அரசின் உதவிக் கரத்தை, உலக சுகங்களில் திளைக்கிற ஒரு சிலர் மறிக்க முயல்வது, மன்னிக்கவும், வக்கிரம்; ஒருவகையில் வன்முறை.
அதேசமயம், இலவசங்களை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்துவதை விடுத்து, சரியானப் பயனாளிகளை சரியான வழியில் சென்றடைகிற வகையில் இலவச திட்டங்கள் இருப்பதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது. தெளிவற்ற இலக்கற்ற இலவசத்துக்கு இது ஒரு நல்ல(?) உதாரணம். வறியவர்களில் ஆண் – பெண் பேதமில்லை. வசதியான குடும்பத்தில் ஆண், பெண் இருபாலருமே வசதி படைத்தவர்கள்தான். ஏழைக் குடும்பத்தில் ஆண், பெண் இருவருமே ஏழைகள்தான்.
தற்போதுள்ள திட்டத்தின்படி, உயர்ந்த பதவியில் நல்ல வருமானம் பெறுகிற ஒரு பெண் இலவசமாகப் பயணிக்கலாம்; அதே பேருந்தில், வயிற்றுப் பிழைப்புக்குச் செல்லும் ஆண் தொழிலாளி, கட்டணம் செலுத்தியாக வேண்டும்! இந்த முரண், இலவசங்களில் கூடவே கூடாது.
குறைந்த வருவாய் பிரிவினரின் குடும்ப அட்டை அடிப்படையில், மாதாந்திர இலவச பயணச் சீட்டுகள் வழங்கியிருக்கலாம். நேரடியாக மிகுந்த பலன் அளித்திருக்கும்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிச் சிறாருக்கு இலவச சிற்றுண்டி – அருமையான திட்டம். பாராட்டலாம்.
ஆனாலும் ஒரு கேள்வி – எல்லா வகையிலும் வளர்ச்சி பெற்ற ஒரு மாநிலம் மென்மேலும் இலவசங்கள் தருவது ஏன்?
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு, மத்திய நிதிக் குழு அளிக்கவிருக்கும் விளக்க அறிக்கை, இலவசங்கள் தொடர்பான தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை முன் வைத்தால் சிறப்பாக இருக்கும்.
இலவசங்கள், மோசமானவை அல்ல. தேவையும் கூட. ஆனால் அவை அரசுப் பணத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சியாக இருத்தல் கூடாது.
அது சரி… ஆட்சியாளர்களுக்கு இது தெரியாதா என்ன..?
இலவசங்கள், மோசமானவை அல்ல. தேவையும் கூட. ஆனால் அவை அரசுப் பணத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சியாக இருத்தல் கூடாது.