ஈரோட்டில் மாநில அளவிலான இறகுபந்து தரவரிசை போட்டியில் 1,250 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகிறார்கள்.
தரவரிசை போட்டி
தமிழ்நாடு இறகுபந்து சங்கம் சார்பில் 13 வயது முதல் 15 வயதுக்கு உள்பட்டோருக்கான மிக இளையோர் இறகுபந்து தரவரிசை போட்டிகள் ஈரோட்டில் நடத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட இறகுபந்து சங்கம் இந்த போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்துகிறது. இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 1,250 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகிறார்கள். ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என்று பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஈரோடு நீல்கிரீஸ் இறகுபந்து அரங்கம், காஸ்மோபாலிட்டன் இறகுபந்து அரங்கம், டேன் கிளப் அரங்கம் மற்றும் டி.கே.எஸ். கிளப் அரங்குகளில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. நேற்று போட்டிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு மாவட்ட இறகுபந்து சங்க தலைவர் எம்.செல்லையன் என்கிற ராஜா தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக தி இந்தியன் பப்ளிக் பள்ளி தாளாளர் டாக்டர் சிவ்குமார் கலந்துகொண்டார்.
இறுதி போட்டி
போட்டிகளில் இளம் வீரர்-வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். போட்டி நடுவராக டி.தினேஷ் செயல்பட்டார். அவரது தலைமையில் நடுவர்கள் ஒவ்வொரு அரங்கத்திலும் போட்டிகளை நடத்தினார்கள். 6-ந் தேதிவரை போட்டிகள் நடக்கின்றன. 6-ந் தேதி இறுதி போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடக்கிறது.
ஈரோடு மாவட்ட இறகுபந்து சங்க செயலாளர் எஸ்.சுரேந்திரன் தலைமையில் இணை செயலாளரும், நீல்கிரீஸ் இறகுபந்து அகாடமி தலைமை பயிற்சியாளருமான கே.செந்தில்வேலன் மற்றும் ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் சங்க நிர்வாகிகள் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார்கள்.