புதுடெல்லி: ‘விலைவாசி உயர்வை மறுக்கவில்லை. உலகளாவிய காரணிகள் பொருளாதாரத்தை பாதிப்பது எதார்த்தம்’ என மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். விலைவாசி உயர்வு தொடர்பாக மக்களவையில் நேற்று முன்தினம் விவாதம் நடந்தது. இதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் குறுகிய நேர விவாதம் நேற்று நடந்தது. அப்போது, நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ளது என்பதை ஒன்றிய அரசு ஒப்புக் கொள்ள வேண்டும், அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளதாகவும் எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்து ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: விலைவாசி உயர்ந்துள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், உலகளாவிய காரணிகள் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கின்றன. இது எதார்த்தம். அதே சமயம், இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் வலுவான நிலையில் உள்ளது. தற்போதைய சூழலில், வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் இந்தியா தனது பொருளாதாரத்தை சிறப்பாக கையாண்டு வருகிறது. பணவீக்கத்தை சமாளிக்க அடிமட்ட அளவில் இருந்து பிரச்னைகளை தீர்த்து வருகிறோம்.ஏழை மக்களின் அன்றாட தேவைக்கான அத்தியாவசிய பொருட்கள் மீது புதிதாக எந்த ஜிஎஸ்டி வரியும் சுமத்தவில்லை. ஜிஎஸ்டிக்கு முன்பாக பருப்பு வகைகள், பன்னீர், மோர், மாவு போன்றவற்றின் மீது பல மாநில அரசுகள் வாட் வரியை விதித்திருந்தன. தற்போது பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே ஜிஎஸ்டி 5 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. சில்லரையாக வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லை. தக்காளி, வெங்காயம், உருளைக் கிழங்கு போன்றவற்றின் விலையை இந்த அரசு கட்டுப்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.