4G யை விட பல மடங்கு அதிவேகம் கொண்ட 5G க்கான ஏலம் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஏலத்தில் பாரத் ஏர்டெல், வோடஃபோன், ரிலையன்ஸ் ஜியோ, மற்றும் கெளதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் போன்ற 4 முக்கிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. மிகுந்த எதிர்பார்ப்போடு தொடங்கப்பட்ட ஏலத்தில் யார் கைவசம் 5G சேரும் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.
ஏலத்தில் நான்கு நிறுவனங்கள் மட்டுமே பங்கு பெற்றதால் ஏழு நாட்களில் இந்த ஏலம் முடிவடைந்துள்ளது. இந்த ஏலத்தில் மொத்தம் 1,50,173 கோடி ரூபாய்களில் அலைக்கற்றை விற்கப்பட்டுள்ளது.
இதில் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 88,078 கோடி ஸ்பெக்ட்ரம் வாங்கியுள்ளது. ஏர்டெல் 43,084 கோடிக்கும், வோடஃபோன் 18,784 கோடிக்கும், அதானி டேட்டா நெட்வொர்க் 212 கோடிக்கும் ஏலம் எடுத்துள்ளது. மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் அம்பானியின் நிறுவனம் அதிகம் வாங்கி 5G யை தன்வசமாக்கி உள்ளது.
மொத்தமாக விற்கப்பட்ட இந்த ஏல தொகையானது முன்பு நடைபெற்ற 4G ஏலத்தின் விற்பனை தொகையான 77,815 கோடியை விட இரு மடங்கு அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஏலம் நிறைவடைந்த நிலையில் அலைக்கற்றைகளை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணிகள் 14 ஆம் தேதிக்குள் நிறைவடையும்.
`உலக தரம் வாய்ந்த 5G சேவையை ஜியோ வழங்க உள்ளது’ என அம்பானி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.