கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளும் ஜிப்மர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சக்தி மெட்ரிக் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13ம் திகதி இறந்தார். 14ம் திகதி மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
மாணவியின் தந்தை, தங்கள் தரப்பு மருத்துவரை வைத்து பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிமன்றம், பெற்றோர் முன்னிலையில் மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து, 19ம் திகதி மறு பிரேத பரிசோதனை நடந்தது. ஆனால், பெற்றோர் பங்கேற்கவில்லை.
மாணவியின் இரு பிரேத பரிசோதனை அறிக்கையும் ஜிப்மர் தடயவியல் துறை பேராசிரியர் குஷகுமார் சாஹா, சித்தார்த்தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் குழு ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் விழுப்புரம் நீதிமன்றத்தில் சீலிட்ட உரையில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், சி.பி.சி.ஐ.டி., பொலிசார், மாணவியின் இரு பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் நேற்று சமர்ப்பித்தனர்.
அறிக்கைகளை ஜிப்மர் மருத்துவமனையில் சமர்ப்பிக்க நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் வீடியோ பதிவு, ஜிப்மர் மருத்துவமனை குழுவினரிடம் சி.பி.சி.ஐ.டி. பொலிசார் ஒப்படைத்தார்கள்