கவர்னர் தமிழிசை பெயரில் அமைச்சரிடம் மோசடி முயற்சி

புதுச்சேரி, : புதுச்சேரி கவர்னர்பெயரில் அமைச்சருக்கு போலியாக எஸ்.எம்.எஸ்., அனுப்பி மோசடி செய்ய முயன்ற மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி என்.ஆர்.காங்., – பா.ஜ., கூட்டணி அரசில் பொதுப்பணி துறை அமைச்சராக உள்ளவர் லட்சுமிநாராயணன். இவரது சமூக வலைதள எண்ணிற்கு,நேற்று முன்தினம் காலை 10.௦௦ மணிக்கு, கவர்னர் தமிழிசை பெயரில் ஒரு குறுஞ்செய்தி வந்தது.

அச்செய்தியில், ‘நான் உடனடியாக உங்ககிட்ட பேசணும், உடனடியாக லைனில் வாங்க. அத்துடன் அமேசான் கிப்ட் கூப்பன் வாங்கி அனுப்புங்க’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.கவர்னரின் மொபைல்போன் எண்ணை ஏற்கனவே அமைச்சர் பதிவு செய்து வைத்திருந்த நிலையில், புதிய மொபைல் எண்ணில் இருந்து கவர்னர் தொடர்பு கொள்ளுமாறு கூறியது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அமைச்சர் லட்சுமிநாராயணன் உடனடியாக, கவர்னரின் தனி செயலருக்கு தகவல் கொடுத்தார்.அதன்பேரில் கவர்னர் அலுவலகம் விசாரணை நடத்தியது. அதில், கவர்னரின் பெயரை யாரோ மோசடியாக பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது.இதுகுறித்து டி.ஜி.பி., மனோஜ்குமார் லால் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி., சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை துவக்கி உள்ளனர்.அமைச்சர் லட்சுமிநாராயணனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய மொபைல் எண்ணை கொண்டு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.அதில், அந்த எண் உத்தரபிரதேச மாநிலத்தில் இருப்பது தெரிய வந்தது. அந்த நபரை கைது செய்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் விரைவில் உத்தரபிரதேசம் செல்ல உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.