ஊத்தங்கரை அருகே காரப்பட்டு-கதவணிபுதூர் செல்லும் சாலையில் பாம்பாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்தங்கரை தாலுகா காரப்பட்டு அருகே உள்ள கதவணிபுதூர் கிராமத்தைச் சுற்றி மயிலாடுபாறை, எம்ஜிஆர் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பிரதானத் தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது.
15 கிமீ சுற்றிச் செல்லும் நிலை
இப்பகுதி மக்கள் தங்களது அன்றாட தேவை மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் காரப்பட்டு, ஊத்தங்கரை பகுதிக்கு தினசரி வந்து செல்கின்றனர். காரப்பட்டுக்கு செல்லும் சாலையில் பாம்பாறு செல்கிறது. மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது சாலை துண்டிக்கப்படும்.
அந்த நேரங்களில் கிராமத்தில் இருந்து 15 கிமீ தூரம் சுற்றித்தான் காரப்பட்டுக்கு செல்லும் நிலையுள்ளது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.
ஆற்றில் வெள்ளம்
இது தொடர்பாக கதவணிபுதூரைச் சேர்ந்த பவுன்ராஜ் மற்றும் சிலர் கூறியதாவது:
எங்கள் கிராமத்தில் இருந்து காரப்பட்டுக்கு சென்று வர கடந்த 2017–18-ம் ஆண்டில் சுமார் ரூ.53 லட்சம் மதிப்பில் ஈரடுக்கு சாலை அமைக்கப்பட்டது. அப்போதே ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.
சாலை அமைத்து ஒராண்டுக்குள் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு ஆற்றைக் கடந்து ஊருக்கு வந்த கல்லூரி மாணவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதுவரை அவரது சடலம் கூட மீட்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த 20 நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் பாம்பாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், வழக்கம்போல, ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. மேலும் விவசாயிகள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தற்போது, ஆற்றில் தண்ணீர் குறையத் தொடங்கியுள்ளதால், ஆற்றின் குறுக்கே மண்ணை கொட்டி சாலையை சீரமைக்கும் பணியை கிராம மக்கள் ஒன்றிணைந்து மேற்கொண்டு வருகிறோம். இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.