காலி முகத்திடல் கடற்கரையில் நேற்று காலை நபரொருவரின் சடலம் கரையொதுங்கியிருந்த நிலையில், சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் காலி முகத்திடலில் கடற்கரையில் கரையொதுங்கிய இரண்டாவது சடலம் இதுவென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று கண்டெடுக்கப்பட்ட சடலம் 40 வயது மதிக்கத்தக்க நபருடையது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காலிமுகத்திடலில் போராட்ட இடத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் சடலம் கரையொதுங்கியமை குறித்து பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நேற்று காலை காலிமுகத்திடலில் சடலம் கரையொதுங்கியமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கோட்டை பொலிஸ் அதிகாரிகள் பரிசோதித்து பின்னர் சடலத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்.
இறந்தவரின் உடலில் காயங்கள் ஏதும் இல்லை
இறந்தவரின் அடையாளம் நேற்று மாலை வரை அடையாளம் காணப்படவில்லை. இறந்தவரின் உடலில் காயங்கள் ஏதும் இல்லை, அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கடந்த 29ஆம் திகதி காலிமுகத்திடல் கடற்கரையில் இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அந்த இளைஞன் பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பின்னர் அடையாளம் காணப்பட்டது.
18 வயதுடைய இளைஞன் மன உளைச்சலில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த இளைஞன் கடந்த 27ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறி 29ம் திகதி காலிமுகத்திடல் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை, அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.