வாய்ப்புகளும், வாழ்க்கையும் இங்கு யாருக்கும் சரிசமமாக அமைந்து விடுவதில்லை. சரிசமமற்ற வாழ்வில் தங்கள் பாதையை கடப்பதே இங்கு பலருக்குப் போராட்டமாக அமைந்து விடுகிறது. ஒரேநேரத்தில் பல பொறுப்புகளை சுமந்து இயங்கும் நிலை சிலருக்கு உருவாகி விடுகிறது. இப்படித்தான் பாகிஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவியான மீராப், உழைத்து வருகிறார். இவரின் வாழ்க்கை, பலருக்கும் ஊக்கமளிக்கும் டானிக்.
பிஸ்சா ஜாஸ் (Fizza ljaz) என்பவர், இரவு நேரத்தில் உணவுகளை கே. எஃப்.சி-யில் இருந்து ஆர்டர் செய்துள்ளார். இதற்காக அவருக்கு ஒரு பெண்ணிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. ’உங்கள் ஆர்டரை நான் கொண்டு வருகிறேன்’ என்று பெண் குரலில் கேட்டபோது, அவருக்கு ஆச்சர்யம். இந்த இரவு நேரத்தில் ஒரு பெண் உணவுகளை விநியோகித்து வருகிறாரா என்று வியந்தார்.
வெளியே வாயிலில் நின்று, டெலிவரி செய்ய வந்த மீராப்பிடம் அவர் வேலை குறித்து ஆர்வத்துடன் விசாரித்துள்ளார். பாகிஸ்தான் லாகூர் பகுதியில் வசித்து வரும் மீராப், இளங்கலை ஃபேஷன் டிசைனிங் பயின்று வருகிறார். தன்னுடைய கல்லூரி கட்டணங்களை சமாளிக்க ’கே.எஃப்.சி ரைடர்’ வேலையைப் பார்த்து வருகிறார்.
பட்டம் பெறும் வரை அடுத்த 3 வருடங்களுக்கு இந்த வேலையைத் தொடர உள்ளார். அதன் பிறகு தன்னுடைய சொந்த ஃபேஷன் பிராண்ட் ஆரம்பிக்க உள்ளார். இதையெல்லாம் மீராப் தெரிவிக்க, ’இவருக்கு இன்னும் பலம் கிடைக்கட்டும்’ என்ற வாழ்த்துடன், இந்த நிகழ்வுகளை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிஸ்சா ஜாஸ்.
அந்தப் பதிவில், ’மீராப்பின் படிப்பு செலவுகளை அறக்கட்டளை பார்த்துக் கொள்கிறது. இருந்தபோதும், அசைன்மென்ட் போன்ற தேவைகளுக்காகவும், குடும்பத்திருக்கு ஆதரவாகவும், தன்னுடைய தாயின் மருத்துவச் செலவுகளை பார்த்துக் கொள்ளவும் வேலை செய்கிறார்’ என எடிட் செய்துள்ளார்.
இந்த போஸ்ட் வைரல் ஆக, மீராப் தன் வாழ்வில் வெற்றியடைய பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
எங்கிருந்தோ ஒரு துளி இன்ஸ்பிரேஷன்… இப்படித்தான் வந்து சேர்கிறது சோஷியல் மீடியா அலைகளில்!