புதுடெல்லி: நாட்டில் இதுவரை கேரளாவில் மூவருக்கும் டெல்லியில் ஒருவருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நால்வரில் கேரளாவை சேர்ந்த ஒருவர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். குரங்கு அம்மைக்கு இந்தியாவில் நிகழ்ந்த முதல் உயிரிழப்பு இதுவாகும்.
இந்நிலையில் நாட்டில் குரங்கு அம்மை நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்கவும் நோய் பரவலை எதிர் கொள்வதற்கான வழிகாட்டுதலை அரசுக்கு அளிக்கவும் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால் தலைமையில் பணிக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
நோய் கண்டறிதல் வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் நோய் தொற்றுக்கான தடுப்பூசிகளை ஆராய்வதற்கான வழி காட்டுதலையும் இக்குழு அரசுக்கு அளிக்கும். பொது சுகாதாரம் தொடர்பான உயர்நிலைக் கூட்டம் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கேபினட் செயலாளர், சுகாதார செயலாளர், பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளர் மற்றும் பிற உயரதிகாரிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பணிக்குழு தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.
பணிக்குழு தலைவர் வி.கே.பால் கூறும் போது, “குரங்கு அம்மை பிரச்சினையை எதிர்கொள்ள ஐசிஎம்ஆர்-ன் 15 ஆய்வகங்கள் கொண்ட வலையமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
ஆந்திராவில் பாதிப்பில்லை
குண்டூர் அரசு மருத்துவ மனையில் கடந்த 29-ம் தேதி ஒடிசாவை சேர்ந்த 8 வயது சிறுவன் குரங்கு அம்மை அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டான். இவரது ரத்த மாதிரி புணே வைராலஜி மையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் சிறுவனுக்கு குரங்கு அம்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.